Home One Line P2 திரைவிமர்சனம் : ‘தம்பி’ – மர்ம முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் – நேர்த்தி மிக்க திரைக்கதை

திரைவிமர்சனம் : ‘தம்பி’ – மர்ம முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் – நேர்த்தி மிக்க திரைக்கதை

346
0
SHARE

தமிழ் இரசிகர்கள் ‘பாபநாசம்’ திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள். கமல்ஹாசனின் இயல்பான நடிப்புக்காக நினைவு கூரப்படும் படம் என்றாலும்,அந்தப் படத்தின் திரைக்கதை ஓட்டமும், எதிர்பாராத திருப்பங்களும் சினிமா இரசிகர்களின் நெஞ்சங்களில் அகலாமல் எப்போதும் பதிந்திருக்கும்.

பாபநாசம் படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அதே பாணியில், குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டு, ஒரு கொலை, அதைச் சுற்றிய மர்ம முடிச்சுகள், அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்கள் என தெளிவான, நேர்த்தியான திரைக்கதையோடு அமைந்திருக்கும் படம் ‘தம்பி’.

மெதுவோட்டப் படம் என்றாலும் சற்றும் பிசகாமல் நேர்க்கோட்டில் பயணம் செய்யும் திரைக்கதை அமைப்பின் இலாவகத்திற்காகவும், கதாபாத்திரங்களின் தன்மையை ஓர் இயக்குநர் எப்படியெல்லாம் செதுக்கிச் செப்பனிட முடியும் என்பதை எடுத்துக் காட்டும் படம் என்பதாலும் அவசியம் பார்க்கலாம்.

கதை – திரைக்கதை – தெளிவு

15 வயதில் நடந்த ஒரு சம்பவத்தால் வீட்டை விட்டு ஓடி விட்ட சரவணன் என்ற மகனை தேடிச் செல்கிறார் ஊர் பிரமுகர் ஞானமூர்த்தி (சத்யராஜ்). கோவாவில் அவரது மகன் இருப்பதாக போலீஸ் அதிகாரி இளவரசு கூற, அவனைப் பார்த்து அவன்தான் எனது மகன் என்று கூறி வீட்டுக்குக் கூட்டி வருகிறார். அந்த மகன்தான் கார்த்தி.

சத்யராஜின் மனைவி சீதா, பாட்டி (பழைய சௌகார் ஜானகி), அக்கா என அனைவரும் இருக்கும் குடும்பத்தில் நுழைகிறார் கார்த்தி. ஒரு ஏமாற்றுப் பேர்வழியாக கோவாவில் சுற்றித் திரிந்த கார்த்திதான் காணாமல் போன உண்மையான சரவணனா, என்பதில் தொடங்கி, இடைவேளைக்குப் பின்னர் நடக்கும் ஒரு கொலை, அதற்கான நோக்கம் இப்படிப் போகும் கதையில், ஊருக்குள் பூர்வகுடி மக்களை வெளியேற்ற நடக்கும் போராட்டம், தம்பியை விட்டு விலகி நிற்கும் அக்காள், உண்மையைக் கண்டு கொண்டும் சொல்ல முடியாமல் தவிக்கும் ஊமைப் பாட்டி, என மற்ற சம்பவங்களோடு சுவாரசியமான கதையைப் பின்னியிருக்கிறார் ஜீத்து ஜோசப்.

திரைக்கதையின் முக்கிய அம்சங்களை சொல்லிவிட்டால் படம் பார்க்கும் சுவாரசியம், திருப்பங்களின் அதிர்ச்சிகளால் நிகழும் பரபரப்பு குறைந்து விடும் என்பதால் படத்தின் மிச்ச கதை என்ன என்பதை படம் பார்த்தால்தான் அனுபவிக்க முடியும்.

எனவே, மீதிக்கதை என்னவென்று கேட்காமல் நேராகப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

‘தம்பி’ – கவரும் சிறப்பு அம்சங்கள்

படம் முடிந்து வெளிவரும்போது நம்மை ஆட்கொள்வது, நேர்த்தியான, நேர்க்கோட்டில் இருந்து சற்றும் பிசகாத திரைக்கதைதான். ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் சம்பவங்களை வைத்து எவ்வாறு கோர்வையாக திரைக்கதையை அமைக்கலாம் என்பதை இந்தப் படத்தை வைத்து வளரும் இயக்குநர்கள் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

கவரும் இன்னொரு அம்சம், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதன் தன்மைக்கேற்ப அதன் குணாதிசயங்களோடு செதுக்கியிருப்பது. இறுதியில் எல்லோரும் நல்லவரே என நாம் நினைக்கும் அளவுக்கு கதாபாத்திரங்களை வடிவமைத்திருப்பதில் இயக்குநரின் அனுபவமும் ஆற்றலும் வெளிப்படுகிறது.

ஒவ்வொரு நடிகரும் தங்களின் கதாபாத்திரத்தை முழுமையாக உணர்ந்து ஒன்றி நடித்திருக்கிறார்கள். வழக்கம்போல் சத்யராஜ் முதன்மையில் நிற்கிறார். ஜோதிகாவுக்கு அவ்வளவு வேலையில்லை என்றாலும் அக்கா பாத்திரத்தில் பாந்தமாகப் பொருந்துகிறார்.

படத்தைத் தூக்கி நிறுத்துவது கார்த்திதான்! கோவாவில் அழகிகளோடு ஆட்டம், ஏமாற்று வேலைகள், மனசாட்சியோடு அடிக்கடி நடத்தும் விவாதங்கள், சத்யராஜ் வீட்டில் நுழைந்ததும் எதிர்நோக்கும் பிரச்சனைகளை புத்திசாலித்தனத்தோடும், நகைச்சுவையோடும் அணுகுவது, பாட்டியாக வரும் சௌகார் ஜானகி முதற்கொண்டு ஜோதிகாவிடம் டியூசன் படிக்கும் சிறு பையன் வரை சமாளிப்பது, சண்டைக் காட்சிகளில் அதிரடி, இறுதியில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடித்து, ஒவ்வொரு கட்டத்திலும் அதிர்ச்சியில் உறைவது – என எல்லா இடங்களிலும் சோடை போகாமல் ஜொலிக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சௌகார் ஜானகி அவரது இயல்பான தோற்றத்தோடு, தள்ளுவண்டியில் பாட்டியாக வந்து வாய் பேசாமல், பார்வையாலேயே தனது உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அனுபவம் பேசியிருக்கிறது.

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் எடுபடாவிட்டாலும், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.

அனுபவம் வாய்ந்த ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது.

படத்தின் பலவீனங்கள்

படத்தின் பலவீனங்கள் என பெரிதாக எதையும் சொல்வதற்கில்லை என்றாலும் பாபநாசம் படத்தை நினைவு கூரும் வண்ணம் பல இடங்களில் சம்பவங்கள் அமைக்கப்பட்டிருப்பது ஒரு குறைதான். அவ்வளவு தூரம் சிந்தித்த இயக்குநர், பாபநாசம் படத்தின் அடிப்படையிலேயே சம்பவங்களை அமைக்காமல் கொஞ்சம் மாற்றியமைத்திருக்கலாம்.

கதாநாயகி நிகிலா விமல் – அவ்வளவு வேலையில்லை. கார்த்தியை காதலிக்க மட்டும் சில காட்சிகளில் வந்து போகிறார்.

முதல் பாதி, மலையாள இயக்குநரின் படம் என்ற வாடையோடு கொஞ்சம் மெதுவோட்டமாக செல்கிறது. எனினும் இடைவேளைக்குப் பின்னர் பரபரப்பான திருப்பங்களோடு, வேகமெடுக்கிறது திரைக்கதை.

மொத்தத்தில் ‘தம்பி’ கார்த்தி, ஜீத்து ஜோசப் இருவருக்கும் பெருமை சேர்க்கிறது.

பார்க்க வேண்டிய சினிமா அனுபவம்!

-இரா.முத்தரசன்

Comments