தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவின் பேரில், ஈராக்கில் அமெரிக்க வான்படை மேற்கொண்டத் தாக்குதலில், ஈரானின் முக்கியமான இராணுவ தளபதியான காசிம் சொலைமணி கொல்லப்பட்டார்.
மத்தியக் கிழக்கில் ஈரானின் அதிகாரத்தை விரிவுபடுத்த முக்கியப்பங்கினை வகித்த சொலைமணி, டிரம்பால் அங்கீகரிக்கப்பட்ட பாக்தாத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை வியாழக்கிழமை இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இந்த தாக்குதலுக்கு ஈரானின் உச்ச தலைவர்கள் கடுமையான பதிலடி கொடுப்போம் என்று அச்சுறுத்தியுள்ளனர். இதனால், கடும் போர் நடக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
சொலைமணியின் மரணம், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்ற நாடுகளை எளிதில் இழுக்கப்படக்கூடிய ஆயுத மோதலுக்கு வழி வகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, மீண்டும் தாக்குவதாக சபதம் செய்துள்ளனர்.
இதனிடையே, நேற்று வெள்ளிக்கிழமை இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சொலைமணியின் மரணம் போரை நிறுத்துவதற்காக நடத்தப்பட்டதாகவும், போரைத் தொடக்க இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.