புது டில்லி: இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான சர்ச்சைகளும், போராட்டங்களும் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை டில்லியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் (ஜேஎன்யூ) முகமூடி அணிந்து நுழைந்த கும்பல் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களைக் கொண்டு அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலில் 30 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி காரணம் என்று இடதுசாரிகள் மாணவர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
வன்முறையைக் கண்டித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்த வன்முறை சம்பவம் கட்டண உயர்வு தொடர்பானது என்றும், கட்டண உயர்வை எதிர்ப்பவர்கள் மாணவர்கள் சேர்க்கை செயல்முறையை சீர்குலைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளது.