புது டில்லி: டில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதியன்று, மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்.
மேலும், ஓடும் பேருந்திலிருந்து அவர் கீழே தள்ளி விடப்பட்ட சம்பவம் இந்திய நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொடூரச் செயலை செய்த அறுவரில் ஒருவன் 18 வயதுக்கு உட்பட்டிருந்ததால், அவன் சீர்த்திருத்தப் பள்ளிக்கு மூன்று ஆண்டுகளுக்கு அனுப்பப்பட்டான். ராம் சிங் எனும் குற்றவாளி சிறைச்சாலையிலேயே தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டான்.
இதனிடையே, நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளான மேலும் நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜனவரி 22-ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்பட உள்ளனர்.
குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ், வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகிய நான்கு பேர் மரண தண்டனையை நிர்பயா வழக்கில் எதிர்கொள்ள உள்ளனர்.