கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நஜிப் ரசாக்கின் ஒன்பது தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளை வெளியிட்டதன் தொடர்பில், அவரது வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
லத்தீபா கோயாவின் இந்த நடவடிக்கை நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக அவர் அம்பலப்படுத்தினார்.
எம்ஏசிசி மற்றும் அதன் தலைமை ஆணையர் லத்தீபா கோயா ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.
“இந்த பதிவில் இரண்டு அல்லது மூன்று வழக்குகள் சம்பந்தமான விவகாரங்கள் உள்ளன. வெளிப்படையாக எஸ்ஆர்சி சம்பந்தப்பட்டிருக்கிறது, 1எம்டிபி சம்பந்தப்பட்டிருக்கிறது. மற்றொரு வழக்கு ரிசா அசிஸைப் பற்றியது, அதுவும் நீதிமன்றத்தில் உள்ளது.”
“இப்போது இது போன்ற பதிவுகளை வெளியிடுவது மற்றும் அதை ஊடகங்களில் விவாதிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். எம்ஏசிசி, குறிப்பாக லத்தீபா கோயாவுக்கு எதிரான அவமதிப்பு (நீதிமன்றம்) நடவடிக்கையை நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்” என்று நேற்று புதன்கிழமை கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறினார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் லத்தீபா வெளிப்படுத்தியவை நஜிப்பின் விசாரணையை பாதிக்கக்கூடும் என்றும் ஷாபி கூறினார்.
“ஏனென்றால் இதுதான் டத்தோஶ்ரீ நஜிப்பை நம்பகத்தன்மையற்றவராக ஆக்குகிறது, அல்லது நீதிமன்றமும் பொதுமக்களும் கூட அவர் குற்றவாளி என்று நினைக்கிறார்கள்”
லத்தீபா வெளிப்படுத்தியதன் மூலம் அதிகாரப்பூர்வ இரகசியங்கள் குறித்த சட்டத்தை மீறியதாகவும் ஷாபி குற்றம் சாட்டினார்.
அதிகாரப்பூர்வ விசாரணைக்கு முன்னர் எம்ஏசிசி பொதுமக்களுக்கு ஆதாரம் என்று கூறி வெளியிடுவது வழக்கத்திற்கு மாறானது என்று அவர் மேலும் கூறினார்.
“வழக்கமாக அவர்கள் காவல்துறை அல்லது எம்ஏசிசிக்கு புகார் அளித்து விசாரணையை இரகசியமாக்குவார்கள். அவை பொதுமக்களுக்கு வெளிப்படாது.”
“லத்தீபா கூட சுல்கிப்ளி விவாதிப்பது ஒரு முறையான இரகசியம் என்று கூறினார். இந்த விடயம் இன்னும் விசாரிக்கப்பட வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.