கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் வெளிநாட்டு தலைவர் உட்பட பல நபர்களிடையே 1எம்டிபி தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் இருந்ததாகக் கூறப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வெளியீடு குறித்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக குற்றவியல் புலனாய்வு பிரிவின் இயக்குநர் மியோர் பாரிட் அலாத்ராஷ் உறுதிபடுத்தினார்.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீபா கோயாவிடமிருந்து தங்களுக்கு அறிக்கை கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
“இன்று (நேற்று) பிற்பகல் புத்ராஜெயாவில் காவல் துறை புகார் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.”
“இந்த அறிக்கையை எம்ஏசிசி தலைமை ஆணையர் வெளியிட்டார்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறியதாக, மலேசியாகினி தெரிவித்துள்ளது.
குற்றவியல் புலனாய்வுத் துறையின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்றும் மியோர் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், எம்ஏசிசியிடம் இருந்து எந்த உரையாடல் பதிவுகளும் காவல் துறையினருக்கு கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
“எங்களுக்கு இதுவரை எந்த உரையாடல் பதிவுகளும் கிடைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
ஜனவரி 8-ஆம் தேதி, நஜிப் சம்பந்தப்பட்ட தொலைபேசி உரையாடல்களின் ஒன்பது பதிவுகளை எம்ஏசிசி வெளியிட்டது.