புத்ராஜெயா – இந்துப் பெருமக்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை பள்ளிகளில் கொண்டாடுவதற்கு எந்தவிதத் தடையுமில்லை என கல்வி அமைச்சு இன்று புதன்கிழமை (ஜனவரி 15) வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தது.
ஏற்கனவே ஜனவரி 13-ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையின் வழி கல்வி அமைச்சு, பொங்கல் கொண்டாட்டங்களில் முஸ்லீம் மாணவர்கள் பங்கேற்பது ‘ஹராம்’ – அதாவது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்தன.
அந்த சர்ச்சைகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் கல்வி அமைச்சு இன்றைய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
“பல்வேறு இனங்களைக் கொண்ட மலேசியாவின் பள்ளிகள் ஒற்றுமையைத் தோற்றுவிக்கும் மையங்கள் என்பதை கல்வி அமைச்சு நன்குணர்ந்துள்ளது. மற்ற இனங்களின் கலாச்சாரங்களும், பண்பாட்டுப் பாரம்பரியங்களும் அனைவராலும் தெரிந்து கொள்ளப்பட்ட வேண்டும், புரிந்து கொள்ளப் பட வேண்டும் என்பதோடு மதிக்கப்படவும் வேண்டும். இது பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். அந்த வகையில் சகிப்புத் தன்மை, புரிந்துணர்வு, இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கலாச்சார நிகழ்ச்சிகளை பள்ளிகளில் கல்வி அமைச்சு எப்போதுமே ஊக்குவித்தும், பள்ளியில் உள்ளவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஆதரித்தும் வந்திருக்கிறது. எனவே, இந்துப் பெருமக்களால் கொண்டாடப்படும் பொங்கல் பள்ளிகளில் கொண்டாடப்படுவதற்கு கல்வி அமைச்சு தடைவிதிக்கவில்லை” என கல்வி அமைச்சின் அந்த அறிக்கை தெரிவித்தது.
“கடந்த 13 ஜனவரி 2020 தேதியிட்ட கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக் கடிதம், இதுபோன்ற கொண்டாட்டங்களில் தங்களின் பிள்ளைகள் பங்கு பெறுவது தொடர்பில் இஸ்லாமியப் பெற்றோர்கள் கொண்டிருந்த கவலையைத் தணிக்கும் விதத்திலேயே அனுப்பப்பட்டது. அந்தக் கடிதம் ஜாக்கிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவின் நிலைப்பாடு மற்றும் வழிகாட்டுதல்கள் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டது. எந்த ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியையும் நடத்தும் பள்ளிகள் நடப்பிலிருக்கும் கல்வி அமைச்சின் விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்பதையும் கல்வி அமைச்சு நினைவுபடுத்த விரும்புகிறது” என்றும் கல்வி அமைச்சின் இன்றைய அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.