Home One Line P1 “பொங்கல் கொண்டாட்டத்தில் முஸ்லீம் மாணவர்கள் பங்கேற்கக் கூடாதா?” – கல்வி அமைச்சுக்கு இராமசாமி கடும் கண்டனம்

“பொங்கல் கொண்டாட்டத்தில் முஸ்லீம் மாணவர்கள் பங்கேற்கக் கூடாதா?” – கல்வி அமைச்சுக்கு இராமசாமி கடும் கண்டனம்

817
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – ஜனவரி 13 தேதியிட்ட சுற்றறிக்கையின்வழி கல்வி அமைச்சு, முஸ்லீம் மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டங்களில் பங்கேற்கக் கூடாது எனவும் அவ்வாறு பங்கேற்பது ‘ஹராம்’ (இஸ்லாம் மதத்துக்கு எதிரானது) என்று இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாக்கிம்) உத்தரவு பிறப்பித்திருப்பது குறித்தும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 13 தேதியிட்ட அந்த சுற்றறிக்கை கல்வி அமைச்சின் அனைத்து மாநில இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவின் ஷரியா சட்டங்கள் மீதிலான நிபுணத்துவ குழு ஒன்று இந்தத் தடையை விதித்திருக்கிறது.

பினாங்கு மாநிலத்தின் கல்விப் பிரிவுக்கான ஆட்சிக் குழு உறுப்பினருமான இராமசாமி “பொங்கல் ஒரு சமய விழா அல்ல. மாறாக எல்லா மதங்களும் கொண்டாடும் தமிழர்களின் அறுவடைத் திருவிழா” என்று கூறியதாக பிரி மலேசியா டுடே இணையத் தளம் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

“இந்துக்கள் பெரும்பான்மையான அளவில் கொண்டாடினாலும் பொங்கல் இந்துப் பெருநாள் அல்ல. மண்பானையில் அரிசி, பால், நெய், சர்க்கரை எனப் பொங்கலிட்டு பால் பொங்கி வழிவதை, நிறைந்த அறுவடைக்கான அடையாளமாகவும், எதிர்காலத்தில் வளப்பம் வந்து சேர வேண்டும் என்றும் கொண்டாடப்படுவதுதான் பொங்கல்” என்று விளக்கம் கூறிய இராமசாமி, கல்வி அமைச்சின் சுற்றறிக்கை தொடர்பில், “இதற்கு முன்னர் பொங்கல் கொண்டாட்டம் பள்ளிகளில் ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை” என்பதையும் சுட்டிக் காட்டினார்.

“சீனப் பெருநாள் அலங்காரங்களின் விவகாரத்தை அடுத்து இப்போது இந்தப் பிரச்சனை எழுந்துள்ளது. இது பின்னணியில் உள்ள சிலர் கீழறுப்பு செய்து அதன் மூலம் நடப்பு இடைக்கால கல்வி அமைச்சரான பிரதமருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கமா?” என்றும் இராமசாமி கேள்வி எழுப்பினார்.

கல்வி அமைச்சு மதச் சார்பின்மையைக் கொண்டது என்பதை நினைவுபடுத்திய இராமசாமி, தற்போது இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவின் (ஜாக்கிம்) உத்தரவுகளைக் கண்மூடிப் பின்பற்றும் இஸ்லாமிய அமைச்சாக கல்வி அமைச்சு மாறிவிட்டதா என்றும் கேள்வி தொடுத்தார்.

“ஜாக்கிம் இலாகா, பாஸ், அம்னோ, புத்ரா போன்றவை போன்றே இன உணர்வுகளைத் தூண்டிவிடும் விவகாரங்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த சுற்றறிக்கை உத்தரவை எழுதிய அதிகாரி உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலக வேண்டும்” என்றும் இராமசாமி சாடினார்.

அந்த ஜனவரி 13 சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் துணைத் தலைமை இயக்குநர் அட்ஸ்மான் தாலிப் எழுதியிருக்கிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் ஜாக்கிம் இலாகாவின் இஸ்லாமிய ஷரியா சட்ட நிபுணர்கள் கூடி பொங்கல் ஹராம் முடிவு செய்ததாகவும், அதனால் முஸ்லீம்கள் அந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்றும் அந்த சுற்றறிக்கை மேலும் தெரிவித்தது.

முஸ்லீம் மாணவர்கள் கண்டிப்பாக பொங்கல் கொண்டாட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்றும் எனினும் அவர்கள் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் தடையில்லை என்றும் அட்ஸ்மான் தனது ஜனவரி 13 தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்துத் தனது முகநூலில் பதிவிட்ட இராமசாமி, பொங்கல் ஆதிகாலம் தொட்டு தமிழர்களால் கொண்டாடப்பட்டு வந்திருப்பதாகவும் ஆனால் எந்த இடத்திலும் அது இந்து சமய விழாவாகக் குறிப்பிடப்பட்டதில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

கல்வி அமைச்சு கண்ணை மூடிக்கொண்டு இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவின் உத்தரவுகளைப் பின்பற்றக் கூடாது என்றும் கேட்டுக் கொண்ட இராமசாமி, அடுத்து இதுகுறித்து இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் முஜாஹிட் ராவா என்ன கூறப்போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் இன்று புதன்கிழமை கல்வி அமைச்சு விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.