Home One Line P1 மின்னலின் தித்திக்கும் பொங்கல் விழா : திரளான நேயர்கள் திரண்டனர்

மின்னலின் தித்திக்கும் பொங்கல் விழா : திரளான நேயர்கள் திரண்டனர்

1304
0
SHARE
Ad

பூச்சோங் – மின்னல் பண்பலை ஏற்பாட்டில் தித்திக்கும் பொங்கல் விழா பூச்சோங்,  14-வது மைல் தமிழ்ப் பள்ளியில் நேற்று சனிக்கிழமை ஜனவரி 18-ஆம் நாள் காலையில் நடைபெற்றது.

காலை மணி ஏழு தொடங்கி பொங்கல் வைக்கும் போட்டி, சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, உறி அடிக்கும் போட்டி, தோரணம் பின்னும் போட்டி, பூ தொடுக்கும் போட்டி என பல போட்டிகளில் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் பங்கு பெற்றனர்.

அது மட்டுமல்லாமல் நமது பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், நெருப்பு கோலாட்டம், தலையாட்டி பொம்மை, மயிலாட்டம், பொய்கால் குதிரை, புலியாட்டம் இவற்றோடு உறுமி மேளம் என விழாக்கோலம் பூண்டது பூச்சோங் 14-வது மைலில் அமைந்துள்ள தமிழ்ப் பள்ளி வளாகம்.

#TamilSchoolmychoice

இவ்விழாவில் 51 குழுவினர் பொங்கல் வைக்கும் போட்டியில் கலந்துக் கொண்டனர். போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகளும் வழங்கப்பட்டன. தொடர்பு பல்லூடக அமைச்சரும் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந் சிங் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

தித்திக்கும் பொங்கல் வைத்து, உறி அடிக்கும் போட்டி நிகழ்ச்சியிலும் கலந்து சிறப்பித்தார். கலாச்சாரமும் பாரம்பரியமும் நிறைந்த இப்பொங்கல் நிகழ்ச்சியை ஒற்றுமையாக பல்வேறு இன மக்கள் கொண்டாடி மகிழ்வது பெருமையாக உள்ளது என்று கூறிய கோபிந்த் சிங், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மின்னல் பண்பலையைப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் அவரோடு பல பிரமுகர்களும் கலந்துக் கொள்ள மின்னலின் பொங்கல் கொண்டாட்டம் மேலும் உற்சாகமாக நடைபெற்றது.

எம்.ஜி.ஆர் சிலம்ப கழக மாணவர்களின் சிலம்பாட்ட படைப்பும், பூச்சோங் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களின் பரத நடனமும் சிம்பாங் லீமா மாணவர்களின் கலாச்சார நடனமும் வருகையாளர்களைக் கவர்ந்தது. அதே வேளையில், பாரம்பரிய கிராமிய ஆடல் பாடல் என நம் நாட்டின் பிரபலமான உள்ளூர் கலைஞர்களான லோகேஷ்வதன், கே.ஜே பாபு, தாச்சாயிணி, டிஎம்எஸ் சிவகாந்தன், ஹேமா, ரோஸ் விரோனிக்கா, “ஊரேல்லாம்” பாடல் புகழ் சதிஸ் நாயுடு இவர்களின் அமர்க்களமான படைப்புகளை மின்னல் பண்பலை நேயர்கள் கண்டுகளித்தனர்.

காலை ஏழு மணி தொடங்கி பிறபகல் 2.00 மணி வரை நடைபெற்ற மின்னல் பண்பலையின் தித்திக்கும் பொங்கல் விழாவில் கலந்துக் கொண்ட அனைத்து அன்பர்களுக்கும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தரப்பினர்களுக்கும் மின்னல் பண்பலையின் நிர்வாகி திருமதி சுமதி நன்றியைத் தெரிவித்து கொண்டார்.

மாணவர்களும் நம் பாரம்பரிய நடனங்கள் போட்டிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சியை பள்ளியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாக சுமதி மேலும் தெரிவித்தார்.

விரைவில் வெளிவரவிருக்கும் நம் நாட்டு திரைப்படங்கள் “உனக்காகதானே”, “சந்தித்த நாள் முதல்”, “அதிகாரி” திரைப்பட குழுவினர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் திரைப்படங்களை பற்றி நேயர்களிடம் பகிர்ந்து கொண்டனர். பேன்ஜீ, ஷீலா பிரவினா, பாலகணபதி, கர்ணன் ஜி கிராக், கல்பனா, விகர்ன், நந்தினி கணேசன், கோகிலா, சுசிலா, ஸ்ரீகாந்த், கபிலன் போன்ற கலைஞர்களும் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

கலாச்சார பாரம்பரிய நடனங்களையும் ரசிக்க வாய்ப்பு கிடைத்ததோடு பொங்கல் வைக்கும் போட்டியிலும் கலந்து கொண்டது மகிழ்ச்சியை தருவதாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நேயர் சந்தியாள் தெரிவித்தார். மின்னல் அறிவிப்பாளர்களின் கலகலப்பான அறிவிப்போடு உறி அடிக்கும் போட்டியும் வெகு சிறப்பாக அமைந்ததாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு நேயர் இராமன் தெரிவித்தார்.

மின்னல் பண்பலை ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பொங்கல் நிகழ்ச்சிக்கு 1500-க்கும் அதிகமான நேயர்கள் கலந்து கொண்டது குறித்து, நேயர்களின் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்ட இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணன், பூச்சோங் நேயர்களின் வரவேற்பு தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவித்தார்.

மின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம் நேயர்களை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாட வைத்தது. மின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: