கோலாலம்பூர்: ஜூன் மாதத்தில் அரசாங்கம் பெரிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தாவிட்டால் மக்கள் மீண்டும் சாலையில் இறங்குவார்கள் என்று முன்னாள் பெர்சே தலைவர் வழக்கறிஞர் அம்பிகா சீனிவாசன் குறிப்பிட்டதற்கு, கெராக்கான் துணைத் தலைவர் ஓ டோங் கியோங் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
“நினைவில் கொள்ளுங்கள், அம்பிகா மற்றும் பெர்சே அமைப்பு தேர்தலுக்கு முன்பு நடுநிலையை இழந்தனர். ஏனெனில் அவர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு பகிரங்கமாக ஆதரித்தனர்.”
“ஆனால், இப்போது அவர் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தத் தவறியதற்காக சாலையில் போராட்டம் நடத்த அச்சுறுத்துகிறார். நம்பிக்கைக் கூட்டணியை ஆதரிக்க அவர்களே அழைத்ததற்கு, அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று ஓ நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓர் அறிக்கையில் கூறினார்.
காவல் துறை படைகள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), தேர்தல் ஆணையம், அரசு ஆலோசனைக் குழு (சிஇபி) மற்றும் நீதித்துறை நியமன ஆணையம் (ஜேஏசி) போன்ற முக்கியமான நிறுவனங்களின் சீர்திருத்தங்களை மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நிறுவன சீர்திருத்தக் குழுவில் (ஐஆர்சி) அம்பிகா உறுப்பினராக உள்ளார்.
கடந்த சனிக்கிழமை, அம்பிகா நம்பிக்கைக் கூட்டணி அரசு அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும், பெரிய புதுப்பிப்புகள் செயல்படுத்தப்படவில்லை எனவும் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள சில தலைவர்கள் முன்னர் இருந்ததைப் போல் இல்லாமல் காணாமல் போய் விட்டனர் என்றும் அவர் கூறினார்.
“அரசாங்கம் மாறாவிட்டால், அம்பிகாவும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும், ஒரு ஹீரோவாக நடிக்கக்கூடாது” என்று ஓ கூறினார்.