கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணிக்கு அதன் புதிய கூட்டணிக் கட்சியாக பாஸ் தேவைப்படாது என்று பிகேஆர் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
அப்படி ஒரு வேளை நம்பிக்கைக் கூட்டணியில், பாஸ் இணைக்கப்பட வேண்டும் என்ற யோசனை அல்லது முயற்சி இருந்தால், அது நட்பு கட்சிகளின் ஒருமித்த கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
“எனவே நான் இதை ஒரு சாதாரண அரசியல் வதந்தியாகவே பார்க்கிறேன். ஆனால், நம்பிக்கைக் கூட்டணி ஒரு புதிய கூட்டணி கட்சியை ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களை நான் காணவில்லை” என்று அவர் கூறினார்.
மக்களின் ஆதரவைப் பெற பாஸ் கட்சியை அரசாங்கத்திற்குள் கொண்டு வருவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும், முயற்சியையும் அமானா கட்சி நிராகரித்தது.
பாஸ் கட்சியின் செல்வாக்கு அரசாங்கத்திற்கு ஆதரவைக் கொடுக்கக்கூடும் என்ற அடிப்படையில், புத்ராஜெயா அல்லது நம்பிக்கைக் கூட்டணி கட்டுப்பாட்டில் உள்ள மாநிலத்திற்குள் அது உள்வாங்க வேண்டிய அவசியமில்லை என்று அமானா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சாலாவுடின் அயோப் கூறினார்.