கோலாலம்பூர்: மைகாட்டில் தனிநபரின் மதத்தின் நிலை அகற்றப்படும் என்று கூறும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் காணொளியில் உள்ள கூற்றுக்களை உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
வாட்சாப் வழியாக பரப்பப்பட்ட தகவல்களை போலி செய்தி என்றும், அது சனிக்கிழமை (ஜனவரி 18) தனது கவனத்திற்கு வந்தது என்றும் அமைச்சகம் விவரித்தது.
“அடையாள அட்டைகளில் மதத்தின் நிலையை நீக்குவதற்கான சாத்தியத்தை முழுமையாக ஆராய எந்த திட்டமும் இல்லை.”
“அடையாள அட்டைகளில் மத அந்தஸ்தைப் பதிவு செய்வது, தேசிய பதிவு விதிமுறைகள் (பிபிபிஎன்) 1990 மூலம் தேசிய பதிவுத் துறையின் கீழ் வருகிறது” என்று அமைச்சகம் இன்று செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், அடையாள அட்டையின் முன்புறத்தில் இஸ்லாம் குறித்த விவரங்களை பதிவு செய்வது பிபிபிஎன் விதிமுறைகள் 5 (2)-க்கு இணங்க உள்ளது என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
“பிற மதங்களைப் பொறுத்தவரை, அத்தகவலானது அடையாள அட்டையின் சில்லுக்குள் சேமிக்கப்படுகிறது.”
“இதுபோன்ற நடவடிக்கைகள் மத்திய அரசியலமைப்பிற்கு ஏற்ப உள்ளன. இது இஸ்லாம் இந்நாட்டின் அதிகாரப்பூர்வமான மதம் என்றும், மற்ற மதங்களை சுதந்திரமாகவும், அமைதியாகவும் கடைப்பிடிக்க முடியும் என்றும் குறிப்பிடுகிறது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“சரிபார்க்கப்படாத செய்திகள், தகவல்கள் மக்களிடையே சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும், அத்துடன் பொது ஒழுங்கை சீர்குலைக்கக்கூடும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறோம்” என்று அது மேலும் கூறியுள்ளது.