சென்னை – நேற்று வெள்ளிக்கிழமை முதல் உலகம் எங்கும் வெளியாகி மாறுபட்ட விமர்சனங்களைச் சந்தித்து வரும் ‘சைக்கோ’ திரைப்படத்தில் பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மிஷ்கினின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்க இயக்குநர் ராம் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். கண்ணாடி இன்றி, தனது வழக்கமான தாடியையும் எடுத்து விட்டு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் ராம்.
கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் தனது இயக்குநர் பயணத்தைத் தொடக்கிய ராம் பின்னர் தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்கப் படங்களை இயக்கியவர். ஏற்கனவே, தங்க மீன்கள் படத்திலும் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராம்.
ஆனால், இந்தப் படத்தில் நடித்திருப்பதன் மூலம் முதன் முதலாக திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் பவா செல்லதுரை. நாவல்கள், சிறுகதைகள் என இலக்கியத் தளத்தில் இயங்கி வரும் பவா செல்லதுரை மலேசியாவுக்கு வருகை தந்து வல்லினம் இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார். மலேசிய எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளும் நடத்தியிருக்கிறார்.
பொதுவாக நூல்கள் குறித்து எப்போதும் பேட்டிகளில் பெருமையாகக் கூறும் இயக்குநர் மிஷ்கின், தமிழக எழுத்தாளர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவர். ஏற்கனவே தனது படம் ஒன்றில் எழுத்தாளர் சாரு நிவேதிதாவை நடிக்க வைத்தவர் மிஷ்கின்.
சைக்கோ படத்தில் தொடர் கொலைகளைச் செய்யும் மனநலம் சிதைந்த கொலைகாரனைத் தேடும் காவல் துறையின் புலனாய்வுக் குழுவில் ஒரு காவல் துறை அதிகாரியாக பவா செல்லதுரை நடித்திருக்கிறார். சிறப்பான நடிப்பு என்று சொல்லும் அளவுக்கோ, நிறையக் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு என்றோ சொல்ல முடியாது என்றாலும், இயல்பான தனக்கே உரித்தான தோற்றத்தில் தோன்றுகிறார் பவா செல்லதுரை. யதார்த்தமான நடிப்பையும் வழங்கியிருக்கிறார்.
சரி! சைக்கோ படம் எப்படியிருக்கிறது?
செல்லியலில் இடம் பெறவிருக்கும் திரைவிமர்சனத்தைப் பாருங்கள்!