Home One Line P2 திரைவிமர்சனம் : “சைக்கோ” – திகிலும், விறுவிறுப்பும் இருந்தாலும் நம்ப முடியாத பூச்சுற்றல் கதையமைப்பு

திரைவிமர்சனம் : “சைக்கோ” – திகிலும், விறுவிறுப்பும் இருந்தாலும் நம்ப முடியாத பூச்சுற்றல் கதையமைப்பு

983
0
SHARE
Ad

தனது தனித்துவமான இயக்கத் திறனால் தனக்கென இரசிகர் கூட்டமொன்றை உருவாக்கியிருக்கும் மிஷ்கினின் கைவண்ணத்தில் வெளிவந்திருக்கும் “சைக்கோ” திரைப்படம் தொழில் நுட்ப அம்சங்களில் உயர்ந்து நின்றாலும், நம்ப முடியாத – காதில் பூச்சுற்றும் இரகக் கதையமைப்பால் ஏமாற்றத்தையே தருகிறது.

கூடவே, பகிரங்கமாக எழுத முடியாத ஓர் இளைஞனின் சில மனநல அம்சங்களையும் முகம் சுளிக்கும் வண்ணம் கதையமைப்புக்குள் புகுத்தியிருப்பதாலும், படத்தில் நிகழும் கொலைகளுக்கும் கொலைகாரனின் மனநலக் கோளாறுகளுக்கும் சரியான வகையில் முடிச்சு போடாத காரணத்தாலும் படம் ஏனோ நம் மனதில் ஒட்டவில்லை.

கதை – திரைக்கதை

படத்தின் பெயரைக் கேட்டவுடனேயே நம் மனதில் என்ன தோன்றுகிறதோ அதுதான் கதையும்! மனநலம் குன்றிய ஓர் இளைஞன் அடுத்தடுத்துக் கொடூரமான முறையில் கொலைகள் செய்வதும், தன்னால் கொலை செய்யப்பட்டவர்களின் தலைகளைக் கொய்து சேகரித்து வைப்பதும், அவனைக் காவல்துறையினர் தேடுவதும்தான் கதை.

#TamilSchoolmychoice

ஒரே வித்தியாசம் என்னவென்றால், தமிழகப் போலீசை இதுவரை யாரும் காட்டாத அளவுக்கு மொக்கையான, அறிவில்லாதவர்கள் போல் காட்டிவிட்டு, அவர்கள் செய்ய வேண்டியதை எல்லாம், கண்டுபிடிக்க வேண்டியதையெல்லாம் கண் தெரியாத குருடரான கௌதம் (உதயநிதி ஸ்டாலின்), தனது புலன்களுக்கே உரிய சில நுட்பங்களின் துணையோடு கண்டுபிடிப்பதும், ஒருவிபத்தால் கை கால்கள் செயல்பட முடியாத நிலையில் தள்ளுவண்டியில் காலத்தைத் தள்ளும் முன்னாள் காவல்துறை அதிகாரி கமலாதாஸ் (நித்யா மேனன்) கௌதமுக்குக் கண்களாக இருந்து வழிகாட்டுவதுமாகப் படத்தில் காட்டுகிறார்கள்.

நம்ப முடியவில்லை!

முதல் காட்சியிலேயே கொலைகாரன் யார் என்பதை முகம் காட்டி விடுகிறார்கள். அதனால் யார் கொலைகாரன் என்ற தேடல் இல்லாமல் படத்தை நகர்த்திச் செல்கிறார்கள்.

வரிசையாக பெண்களைக் கொலை செய்து விட்டு, தலையை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு வெறும் உடலை மட்டும் அரை நிர்வாணமாக பொது இடங்களில் கிடத்தி வைக்கிறான் கொலைகாரன்.

வானொலி அறிவிப்பாளரான டாகினியை (அதிதி ராவ்) அவரது குரலை வைத்தே காதலிக்கிறார் கண் தெரியாத மாற்றுத் திறனாளியான கௌதம் (உதயநிதி ஸ்டாலின்). பல இடங்களில் டாகினியைப் பின்தொடர்கிறார். முதலில் அவர் ஏமாற்றுகிறார் என நினைத்து அவரைத் தவிர்க்கும் டாகினி பின்னர் கௌதம் உண்மையிலேயே கண்தெரியாதவர் என்பதைப் புரிந்து கொண்டு அவர் மீது பரிதாபம் கொள்கிறார்.

இதற்கிடையில் வானொலி அறிவிப்பாளரான டாகினியை (அதிதி ராவ்) கௌதம் முன்னாலேயே கடத்திச் செல்கிறான் கொலைகாரன். அவளையும் கொலை செய்ய முற்படும்போது, “நீ கொலைசெய்யப் போகும் கடைசிப் பெண் நான்தான். ஏனென்றால் என்னுடைய கௌதம் உன்னைத் தேடி வந்து கொல்வான்” என்கிறாள் டாகினி. “அப்படியானால் உன்னை ஏழு நாட்கள் விட்டு வைக்கிறேன். அதற்குள் கௌதமையும் கொன்று உனக்குப் பரிசளிக்கிறேன்” என்று சவால் விட்டு அவளை உயிரோடு தனது பாதுகாப்பில் அடைத்து வைக்கிறான் கொலைகாரன்.

தொடர்ந்து அவள் கண் முன்னாலேயே மேலும் சில கொலைகளையும் செய்கிறான் கொலைகாரன்.

கொலைகாரன் தனது சவாலில் வென்றானா? கௌதம் எப்படி டாகினியைக் கண்டுபிடிக்கிறான்? கொலைகாரனின் மனநல சிதைவுக்குக் காரணம் என்ன? என்பதைச் சொல்வதுதான் மீதிக் கதை.

படத்தின் சிறப்பம்சங்கள்

கொலைகாரனாக நடித்திருக்கும் ராஜ்குமார் பிச்சுமணி

நடிக்கவே வராத உதயநிதி ஸ்டாலின் கதைக்குப் பொருத்தமான தேர்வு. குருடராக வருவதால் இறுதிவரை கண்களில் கறுப்புக் கண்ணாடி அணிந்து வருகிறார். என்ன முகபாவம் காட்டுகிறார் என்பது அதனால் தெரியவில்லை. அழ வேண்டிய ஒரு காட்சியிலும் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அழுகிறார்.

மிஷ்கினின் இயக்கத் திறமையும், அவர் காட்சிகளின் கோணத்தை அமைத்திருக்கும் பாங்கும் தொழில் நுட்ப ரீதியாகக் கவர்கிறது. பல இடங்களில் கேமரா அந்தரத்தில் இருந்தே படம் பிடித்திருக்கிறது.

அவருக்குப் பொருத்தமாக வந்து இணைந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். வழக்கமாக, மணிரத்னம் போன்ற இயக்குநர்களின் பிரம்மாண்ட படைப்புகளில் மட்டும் பணிபுரியும் ஸ்ரீராம் இந்தப் படத்தில் மிஷ்கினோடு கைகோர்த்திருப்பது மிஷ்கினுக்கும் பெருமை.

தனது அனுபவத்தைத் திரையில் காட்டுகிறார் ஸ்ரீராம். ஆகாயத்திலிருந்து பார்க்கப்படுவதுபோல் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள், இருட்டு சாலைகளில் பயணம் செய்யும் காரின் சிவப்பு, மஞ்சள் போன்ற சமிக்ஞை விளக்குகளின் வெளிச்சத்திலேயே காட்சிகளைக் காட்டுவது, இருட்டறைகளின் மெல்லிய விளக்கொளி வெளிச்சங்களில் காட்சிகளின் பரபரப்பைக் கூட்டுவது என படம் முழுக்க ஸ்ரீராமின் அனுபவத் திறன் வெளிப்படுகிறது.

இளையராஜாவின் பின்னணி இசை வழக்கம்போல் படத்திற்கான இன்னொரு பலம். பாடல்கள் ஏனோ மனதில் ஒட்டவில்லை.

படத்தின் இன்னொரு பலம் தள்ளுவண்டியில் உட்கார்ந்து கொண்டே தனது பேச்சுகளாலும், கண்களாலும், முகபாவங்களாலும் நடிப்பில் விளாசித் தள்ளும் நித்யா மேனன். ஆனால், அவர் வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தைகளாக, ஆங்கிலத்திலும், தமிழிலும் வந்து விழுகின்றன. தனது அம்மாவைக் கூட பெயர் சொல்லி அழைத்து அப்படியா திட்டுவாள் ஒரு தமிழ்ப் பெண்?

கொலைகாரனாக நடிப்பவர் பொருத்தமான தேர்வு. நன்றாகவும் நடிக்கிறார். ராஜ்குமார் பிச்சுமணி என்ற புதுமுகமாம். ஆனால் இறுதிவரை முகத்தை அப்படி இறுக்கமாக வைத்திருப்பது ஏன்?

படத்தின் பலவீனங்கள்

கொலைகாரனை எடுத்த எடுப்பிலேயே காட்டி விடுவதால் படத்தில் சுவாரசியம் குறைகிறது. தொடர் கொலைகளால் ஊரே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்க கொலைகாரன் யார் என்பது தெரியாமல் போலீஸ் திணறுவது நம்பும்படி இல்லை. வழக்கமாக கதாநாயகன் சண்டை போட்டு முடிந்தவுடன் போலீஸ் வரும். இதில் ஒரு கொலை முடிந்து உடல் கிடத்தப்பட்டவுடன் வருகிறார்கள்.

கௌதமும், கமலாவும் கண்டுபிடிக்கும் மிகச் சாதாரண துப்புகளைக் கூட கண்டுபிடிக்கத் தெரியாத – முடியாத – துப்பில்லாத போலீசாக தமிழகக் காவல் துறையைக் காட்டியிருக்கிறார்கள். ஒரே ஒரு கட்டத்தில் மட்டும் கொலைகாரனின் அடையாளங்களைக் கண்டுபிடிப்பதோடு சரி,மற்றபடி காவல் துறை எதையுமே கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது என்று சொல்ல வருவது நம்ப முடியவில்லை. அதற்கு விசாரணை அதிகாரி ராம் கூறும் காரணங்களும் சொதப்பலாக இருக்கிறது.

கொலைகாரனைத் தேடும் முயற்சியில் அவர்கள் பட்டும் படாமலும் ஈடுபடுவதுபோல் காட்டப்படுவதும், கொலைகாரனைக் கண்டுபிடிக்க அவர்கள் ஓர் அங்குலம் கூட நகர முடியவில்லை என்று சித்தரிப்பதும் படத்தின் திரைக்கதையின் மிகப் பெரிய ஓட்டை.

அடுத்ததாக, கண் தெரியாத கௌதம், கமலா வழி சொல்லச் சொல்ல நெடுஞ்சாலைகளில் கார் ஓட்டுவது, தனி ஆளாக கொலைகாரனின் இடத்திற்குள் நுழைவது எல்லாம் நம்ப முடியாத கற்பனை.

கொலைகாரனின் மனச் சிதைவு சரி – ஆனால் அதற்காக ஏன் பெண்களாகப் பார்த்துக் கொலை செய்கிறான், ஏன் அப்படிக் கொடூரமாகக் கொலை செய்கிறான், என்பதற்கான விளக்கங்கள் இல்லை.

அதுபோலவே, அவன் மனச் சிதைவுக்கான காரணமாகக் காட்டப்படுவதும் வலுவாக இல்லை. அருவருப்பாக, முகம் சுளிக்கவே செய்கிறது. அவனுக்கு நேர்ந்ததற்கும் அவன் கொலைகள் செய்வதற்கும் என்ன சம்பந்தம் என்பது சொல்லப்படாததால் கதையோட்டத்தில் பெரும் தொய்வு ஏற்படுகிறது. மிஷ்கின் எத்தனையோ வலுவான வேறு காரணங்கள் கண்டுபிடித்திருக்கலாம்.

அழகான அதிதி ராவ் கதாநாயகி என்று போட்டுவிட்டு, போய்ப் பார்த்தால் ஓரிரு காட்சிகளில் அழகு பவனி வருவதோடு சரி. எஞ்சிய படம் முழுவதும் ஒரே கலைந்த ஆடையில், இரத்தச் சகதி சிதறிக் கிடக்கும் அறையிலேயே பயந்த முகத்துடன் கிடக்கிறார்.

படத்தின் பலவீனங்கள் சிலவற்றைச் சரிசெய்து, திரைக்கதையை மேலும் நம்பும்படி அமைத்திருந்தால், தமிழின் சிறந்த திரில்லர் படங்களில் ஒன்றாக சைக்கோ அமைந்திருக்கும்.

தொழில்நுட்ப அம்சங்களை இரசிக்கும் சினிமா இரசிகர்களுக்கு மட்டும்தான் “சைக்கோ” பிடிக்கும்!!

-இரா.முத்தரசன்