Home One Line P1 கெராக்கான் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்து, அதிர்வலைகளை ஏற்படுத்திய மகாதீர்

கெராக்கான் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்து, அதிர்வலைகளை ஏற்படுத்திய மகாதீர்

850
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிமுக்கு விட்டுக் கொடுப்பாரா, மாட்டாரா என்ற கேள்வி ஒருபுறம் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொரு புறத்தில் தனது அதிரடி அரசியல் சந்திப்புகளின் மூலம் மலேசிய அரசியல் அரங்கில் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார் துன் மகாதீர்.

நேற்று சனிக்கிழமை (ஜனவரி 25) கோலாலம்பூரில் கெராக்கான் கட்சியின் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பல புதிய கேள்விகளை எழுப்பியிருப்பதோடு, பலரின் புருவங்களையும் உயர்த்தச் செய்துள்ளார் மகாதீர்.

அண்மையில் பாஸ் கட்சியின் தலைவர் ஹாஜி ஹாடி அவாங்கைச் சந்தித்துப் பல்வேறு அரசியல் ஆரூடங்களுக்கு வழிவகுத்தார் மகாதீர். அந்த சலசலப்பு அடங்கும் முன்னரே நேற்று கெராக்கானின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு புதிய அரசியல் ஆரூடங்களுக்கு வித்திட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

2018 பொதுத் தேர்தல் வரை தேசிய முன்னணியில் அங்கம் வகித்த கெராக்கான் அதன் பின்னர் அந்தக் கூட்டணியிலிருந்து விலகியது. தற்போது தனித்துச் செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலிலும் தனித்து நின்றுப் போட்டியிட்டு மோசமான தோல்வியைத் தழுவியது.

பினாங்கு மாநிலத்தைப் பொறுத்தவரை நம்பிக்கைக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜசெகவின் பரம வைரியாகப் பார்க்கப்படுவது கெராக்கான் கட்சிதான். பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றுவோம் என பல ஆண்டுகளாக முழக்கமிட்டு வந்த ஜசெக, அந்தக் கனவுகளை அடைய முடியாமல் கிடந்ததற்கு, தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சியாக  பினாங்கு மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த கெராக்கான் கட்சிதான் முக்கியக் காரணமாக இருந்தது.

ஆனால், கெராக்கான் கட்சியின் அந்த ஆதிக்கத்தை 2008-இல் அன்வார் இப்ராகிமின் தலைமையிலான பிகேஆர் கட்சியின் துணையுடனும், பாஸ் கட்சியின் ஒத்துழைப்புடனும் ஜசெக முறியடித்து பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றியது.

அப்போது முதல் பினாங்கைத் திரும்பக் கைப்பற்றும் கெராக்கானின் கனவுகள் வெறும் கானல் நீராகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் மகாதீர் நம்பிக்கைக் கூட்டணியிலும் அங்கம் வகிக்காத கெராக்கான் கட்சியின் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்து கொண்டதை ஜசெக எப்படி எடுத்துக்கொள்ளும் என்பது தெரியவில்லை.

மகாதீரோடு பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியும் கலந்து கொண்டதும் பல அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளது.

“எங்கள் கட்சியின் சீனப்புத்தாண்டு உபசரிப்புக்கு நாட்டின் பிரதமரை அழைப்பது வழக்கமான ஒன்றுதான். கடந்த ஆண்டும் நாங்கள் அழைத்திருந்தோம். ஆனால் அவரால் வர இயலவில்லை. இந்த ஆண்டு அழைத்தோம். வந்திருக்கிறார்” என கெராக்கான் கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் டொமினிக் லாவ் கூறியிருக்கிறார்.

எனினும் மகாதீரின் வருகை, கெராக்கான் கட்சி நம்பிக்கைக் கூட்டணியில் இணையலாம் என்ற ஆரூடத்திற்கும், அல்லது மகாதீர் புதிய கூட்டணியை உருவாக்க முயற்சி செய்கிறாரா என்ற கேள்விக்கும் வழி வகுத்துள்ளது.

இதற்கிடையில் மகாதீரின் வருகை கெராக்கான் கட்சியிலும் புகைச்சலையும், கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

கெராக்கான் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ லியாங் தெக் மெங் மகாதீரை அழைத்ததற்காக கெராக்கானின் தலைமைத்துவத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

முன்பு கெராக்கான் கட்சித் தலைவர் லாவ் மகாதீரை பிரதமர்களிலேயே அதிக இனவெறி கொண்ட பிரதமர் எனச் சாடியிருந்தார், ஆனால் இப்போதோ அவருடன் கெராக்கான் கட்சியினர் சீனப் புத்தாண்டு கொண்டாடுகின்றனர் என டத்தோ லியாங் தனது முகநூல் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.