கோலாலம்பூர்: கொரொனாவைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூகப் பக்கங்களில் பரப்பிய நபரை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தடுத்து வைத்துள்ளது.
கடந்த ஜனவரி 26-ஆம் தேதி இந்த நோய் குறித்து போலியான தகவலை சமூகப் பக்கங்களில் பகிர்ந்ததை அடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு 34 வயதான அந்நபர் கைது செய்யப்பட்டதாக அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“கொரொனாவைரஸ் குறித்து வெளியிடப்பட்ட உள்ளடக்கம் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது. முகநூல் பக்கத்தில் உள்ளடக்கத்தை பதிவேற்ற பயன்படுத்தப்பட்ட சந்தேக நபருக்கு சொந்தமான ஒரு கைபேசி மற்றும் சிம் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டன.” என்று அது குறிப்பிட்டுள்ளது.
தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
“எம்சிஎம்சி மற்றும் காவல் துறையினர் பொறுப்பற்ற நபர்களால் கொரொனாவைரஸ் குறித்த சரிபார்க்கப்படாத செய்திகளைப் பரப்புவதைத் தடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த கடுமையான நடவடிக்கை அமைகிறது. ஏனெனில், இது நாட்டில் நிலைத்தன்மையையும் பொது ஒழுங்கையும் அச்சத்திற்கு உட்படுத்தக்கூடும்,” என்று அது கூறியது.