கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பதற்காவும் எந்தவொரு பேரணியும் கட்சியின் ஒழுக்காற்று வாரியத்தின் முடிவினை பாதிக்காது என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
எனவே, கட்சி தலைமையகத்தின் முன்னும், மற்ற எல்லா இடங்களிலும் கூட்டம் கூட்டுவதை தவிர்த்து கலைந்து செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
உத்தரவை மீறிய கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க கட்சியின் ஒழுக்காற்று வாரியம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“சுரைடா கமாருடின் பதவி நீக்கம் செய்யப்படுவதை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ பிகேஆர் தலைமையகத்திற்கு முன்னால் கூடியிருக்கும் குழுக்களைக் குறிப்பிட்டு கூறுகிறேன், கலைந்து செல்லுங்கள்”
“இம்மாதிரியான நடவடிக்கைகள் ஒழுக்காற்று வாரியத்தின் சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலையை எந்த வகையிலும் பாதிக்காது” என்று அவர் இன்று புதன்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த மாதம் ரினாசன்ஸ் தங்கும் விடுதியில் பிகேஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி நடத்திய கூட்டத்தின் போது அவர் ஆற்றிய உரையுடன், அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.