புது தில்லி, ஏப்ரல் 9- பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள்கள் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை (ஏப்ரல் 10) ஜெர்மனி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை அமைச்சர் ஃபரூக் அப்துல்லா, மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம். பல்லம் ராஜு, அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுத் துறைச் செயலர் ரஞ்சன் மத்தாய் ஆகியோர் செல்கின்றனர்.
இது குறித்து, தில்லியில் செய்தியாளர்களிடம் ரஞ்சன் மத்தாய் திங்கள்கிழமை கூறியதாவது:-
இந்திய, ஜெர்மனி நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங் புதன்கிழமை ஜெர்மனி தலைநகர் பெர்லின் செல்கிறார்.
மறுநாள் காலையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் சம்பிரதாய முறையிலான வரவேற்பை அளிக்கிறார். அதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் விவாதிக்கும் கூட்டுக்கூட்டம் நடைபெறும்.
பிறகு, இரு தலைவர்களின் முன்னிலையில் கல்வி, வர்த்தகம், எரிசக்தி மேம்பாடு, அறிவியல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. ஜெர்மன் அதிபர் கோச்சிம் கௌக்கை மன்மோகன் சிங் 12-ம் தேதி சந்தித்துப் பேசுகிறார்.
இந்தியா-ஜெர்மனி இடையே ராஜீய உறவுகள் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதை குறிக்கும் வகையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை இரு நாடுகளும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளை கூட்டாக நடத்தின.
அதையொட்டி நடைபெற உள்ள சிறப்பு கலாசார நிகழ்ச்சியை பிரதமர் மன்மோகன் சிங், இந்திய அமைச்சர்கள், இந்திய வம்சாவளி சமூகத்தினர் உள்ளிட்டோர் பார்வையிடுவர் என்று ரஞ்சன் மத்தாய் கூறினார்.