Home இந்தியா “மேடையில் வீசிய மெல்லிய தென்றல்” – பேரறிஞர் அண்ணா!

“மேடையில் வீசிய மெல்லிய தென்றல்” – பேரறிஞர் அண்ணா!

9512
0
SHARE
Ad

(இன்று பிப்ரவரி 3-ஆம் நாள் பேரறிஞர் அண்ணாவின் மறைந்த நாள். சி.என். அண்ணதுரை என்ற இயற்பெயர் கொண்டவர் கால ஓட்டத்தில் பேரறிஞர் அண்ணா என உலகம் எங்கும் உள்ள தமிழர்களால் பெருமையுடன் கொண்டாடப்பட்டவர். பெரியாரின் தலைமைச் சீடராக பொது வாழ்வுக்கு வந்தவர் தனது எழுத்தாலும், பேச்சாற்றலாலும், தனித்துவமிக்க அறிவாற்றலாலும் ஒரு மாபெரும் தலைவராக எழுச்சி பெற்று, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை உருவாக்கி, 22 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து, மெட்ராஸ் மாநிலத்தை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றியது போன்ற பல சீர்திருத்தங்களை அமுலாக்கியவர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, மலேசிய எழுத்தாளர் நக்கீரன் எண்ணங்களில் உதித்த இந்த சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது)

அந்நாளைய மன்னராட்சி காலத்தில் இருந்து இந்நாளில் தொடரும் மக்களாட்சி காலம்வரை தலைவர்கள், தங்களுக்குப் பின் எவர் வர வேண்டும் என்பதைவிட எவர் தலைவராக வரக்கூடாது என்பதில்தான் பேரக்கறைக் காட்டுவது வழக்கம். இதில், விலக்கானவர் பேரறிஞர் அண்ணா மட்டுமே!

தன்னைச் சுற்றியிருந்த தம்பிமார் அனைவரையும் அவரவர் போக்கில் ஊக்குவித்தவர் அண்ணா.

#TamilSchoolmychoice

அரசியல், சமூகவியல், பொருளியல் சிந்தனையில் எல்லாம் தேர்ந்த அண்ணா, தமிழ்-ஆங்கில இலக்கியங்களிலும் சிறந்து விளங்கியதுதான் தனிச்சிறப்பு. அனைத்திற்கும் மேலாக, அவர் ஒப்பாரும் மிக்காருமில்லாத சொற்பொழிவாளர். அடுக்குமொழியில் பேசி திடுக்கிடச் செய்த இவரின் நடை, ஒரு தனி நடை.

தமிழிலக்கிய உலகும் அரசியல் உலகமும் கண்டறியாத நனிசிறந்த நாகரிக மேடையை உருவாக்கியவர் அண்ணா. குறிப்பாக, அரசியில் மேடை என்றாலே அதில் அனல் தெறிக்கும்; கனல் வீசும்; கதகதப்பான அரசியல் கருத்துகளால் தகதகப்பதுதான் அரசியல் மேடை; அவ்வாறு இல்லாவிட்டால் அது என்ன அரசியல் மேடை என்று அதற்கு இலக்கணம் சொன்னவர்கள்கூட, தம் மனைதை மாற்றிக் கொள்ளும் வண்ணம் தன் மேடைப்பேச்சில், இனிமையையும் புன்னகையையும் தவழவிட்டவர் அண்ணா.

இந்த உலகில் தமிழனாகப் பிறந்திட்ட ஒவ்வொருவரும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டதை எண்ணியெண்ணி இறுமாப்பெய்தலாம். தமிழ், நம் மொழி என்பதற்காக மட்டுமல்ல; உண்மையிலேயே இந்த உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் முந்து மொழியும் மூத்த மொழியும் நம் தமிழ் மொழியாம். இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் இன்னும் பிற காரணங்களாலும் இன்று உலக மக்கள் தங்களுக்கிடையே கூறு போட்டுக்கொள்கின்ற நிலையில், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று கணியன் பூங்குன்றனார் சொல்லியிருக்கிறார் என்றால், அது தனியொரு குன்றனாரின் கருத்தல்ல; ஒட்டுமொத்த தமிழினத்தின் வளமான சிந்தையின் வெளிப்பாடு என்றவர் அண்ணா.

தமிழரின் நிலை மாற வேண்டும்; உயர வேண்டும் என்பதற்காக காலமெல்லாம் பாடாற்றிய அண்ணா, அதற்காக வேளை வாய்த்தபோதெல்லாம் குரல் கொடுத்தார். ஒரு முறை, மேடையில் முழங்கிக் கொண்டிருந்தபொழுது, “இந்த ஒலிபெருக்கியைக் கண்டு பிடித்தவர் யார் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. மின்சாரத்தை கண்டு பிடித்தது யாரென்று கேட்டால் தெரியாது. நாம் பயணம் செய்யும் மோட்டார் வண்டியையோ, தொடர் வண்டியையோ கண்டு பிடித்தவர் யாரென்று வினவினால் தெரியாது. ஆனால், எமனுக்கு வாகனம் எது என்று கேட்டால் நேரில் பார்த்ததைப் போல எருமை மாடு என்பார்கள். இதுதான் தமிழனின் இன்றைய நிலை” என்று இருபதாம் நூற்றாண்டில் தமிழினத்தைப் படம் பிடித்தவர் அண்ணா.

எத்தனையோ சிறப்புக்கும் மேன்மைக்கும் உரிய அண்ணா, தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று கொஞ்ச காலத்திலேயே இறக்க நேரிட்டது, தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல; உலகளாவிய தமிழ் இனத்திற்கு இழப்பு என்றுகூட வரையறுக்க முடியாது. மாறாக, இந்திய துணைக் கண்டத்திற்கே பேரிழப்பாகும். இன்னும் ஓர் ஐந்து ஆண்டு காலம் பேரறிஞர் அண்ணா வாழ்ந்திருந்தால், இந்தியாவின் போக்கே மாறி யிருக்கும்.

அப்படியென்றால் தமிழ் நாடு? அது இன்னும் எல்லா வகையிலும் பன்மடங்கு மேம்பட்டிருக்கும்.

– நக்கீரன்
கோலாலம்பூர்