கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் சிகிச்சை பெறுவதற்காக கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
ரோஸ்மாவின் வழக்கறிஞர் அக்பெர்டின் அப்துல் காடிரை மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, ரோஸ்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியதாக அது குறிப்பிட்டுள்ளது.
ரோஸ்மாவுக்கு எதிரான ஊழல் வழக்கில் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞராக அக்பெர்டின் இருக்கிறார்.
“ஆம், மருத்துவரின் ஆலோசனைக்கு உட்பட்டு, ரோஸ்மா சில நாட்கள் சிகிச்சை பெறுவார்” என்று அவர் மேலும் கூறினார்.
ரோஸ்மாவுடன் நஜிப்பும் நேற்று மருத்துவமனையில் இருந்தார் என்பதை அக்பெர்டின் உறுதிப்படுத்தினார்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த ஊழல் விசாரணையின் முதல் நாளில் ரோஸ்மா கலந்து கொள்ளவில்லை. அவரது வழக்கறிஞர் பிப்ரவரி 2-ஆம் தேதியிடப்பட்ட சுகாதார அறிக்கையின் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.