கோலாலம்பூர்: பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் அரசியல் ஒத்துழைப்பு இருப்பதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியின் குற்றச்சாட்டு தொடர்பான வதந்திகளை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நிராகரித்தார்.
“வதந்திகளுக்கு நேரத்தை வீணாக்க வேண்டாம். அங்கும் இங்கும் தொடர்ந்து வதந்திகள் வரும். நிச்சயமாக, பல சந்தர்ப்பவாதிகள் அரசாங்கத்தின் மீது பழித் தொடர விரும்புகிறார்கள்.”
“எங்களுக்குத் தெரிந்தவரை, மகாதீரின் கீழ் உள்ள நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வலுவானது மற்றும் நிலையானது.”
“வதந்திகளுக்கு நேரத்தை வீணாக்காதீர்கள்” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
முன்னதாக, பாஸ் கட்சி மகாதீருடன் இணைந்து பணியாறறுவதால், அம்னோ கட்சியும் அவ்வாறு செய்ய வேண்டும் அம்னோ தலைவர் சாஹிட் ஹமீடி கூறியதாக அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் லோக்மான் நூர் குற்றம் சாட்டியிருந்தார்.
சாஹிட் மீதான தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய லொக்மான், மக்களைப் பாதுகாக்க போராடத் தயாராக இருக்கும் தலைவர்கள் அம்னோவுக்குத் தேவை என்றும், “அதிகாரத்தில் இருப்பவர்களுடன் சமரசம் செய்யத் தயாராக உள்ளவர்கள்” தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.