Home One Line P2 ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும், பிரிட்டனுக்கு நெருக்கடி இன்னும் தீரவில்லை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும், பிரிட்டனுக்கு நெருக்கடி இன்னும் தீரவில்லை

715
0
SHARE
Ad

இலண்டன் – நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்னர் கடந்த ஜனவரி 31-ஆம் தேதியோடு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டாலும், அது தொடர்பான நெருக்கடிகளும் தலைவலிகளும் இன்னும் தீர்ந்தபாடில்லை.

பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு இன்னும் சில சவால்கள் காத்திருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டாலும் எதிர்வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டம், ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்கான கால அவகாசமாக பிரிட்டனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அதற்குள்ளாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான அனைத்து அம்சங்கள் மீதிலான ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் நடப்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்துடனான அத்தனை ஒப்பந்தங்களும் காலாவதியாகி, பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பரிமாற்றங்களில் பெரும் குழப்பமும், பிரச்சனைகளும் ஏற்படும்.

புதிய ஒப்பந்தங்களுக்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை இருந்தாலும், எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதிக்குள்ளாக அந்த இறுதித் தேதியை பிரிட்டன் நிர்ணயித்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கே பல ஆண்டுகள் எடுத்துக் கொண்ட பிரிட்டன் தற்போது புதிய ஒப்பந்தங்களை இந்த ஆண்டுக்குள் இறுதிக்குள் முடிவெடுத்து கையெழுத்திட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனினும், பொதுத் தேர்தலில் போரிஸ் ஜோன்சனின் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி கண்ட பிரம்மாண்டமான வெற்றி பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் திட்டத்தை சுமுகமாகத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.