கோலாலம்பூர்: சீனாவிலிருந்து பிப்ரவரி மாதம் வீடு திரும்பிய மலேசியர் ஒருவர், கொரொனாவைரஸ் நோய்தொற்று கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வுஹானில் இருந்து தோன்றிய இந்த கிருமி தொற்றிருக்கும் 18- வது நபராக அவர் கண்டறியப்பட்டுள்ளார்.
மக்காவில் பணிபுரிந்து வந்த 31 வயதான அந்த இளைஞருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் பிப்ரவரி 3-ஆம் தேதி இருமல் தொடங்கியது என்றும் சுகாதார அமைச்சின் இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
“பிப்ரவரி 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அவருக்கு சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது . அங்கு அவருக்கு மருந்து வழங்கப்பட்டது.”
எவ்வாறாயினும், பிப்ரவரி 7- ஆம் தேதி, அந்த நபர் குணமடையாததால், அவர் பின்னர் தொடர் சிகிச்சைக்காக பந்திங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
“அவரைப் பரிசோதித்ததில் அவர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறியப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.”
“மேலும் சோதனைகளில் கடுமையான சுவாச நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. பின்னர் அவர் சுங்கை புலோ மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) கொரொனாவைரஸுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டது.”என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் சுகாதாரத் துறை மற்றும் கோலா லங்காட் சுகாதார அலுவலகம் ஆகியவற்றை அந்நபரின் அசைவுகளைக் கண்டறிந்து மேலும் நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளன.
“பந்திங்கில் வசிப்பவர்கள் அமைதியாக இருக்க நான் அறிவுறுத்த விரும்புகிறேன். அமைச்சகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது மற்றும் அவ்வப்போது சமீபத்திய தகவல்களை தெரிவிக்கும், ”என்று அவர் கூறினார்.