சுங்கை பட்டாணி: சுங்கை பட்டாணியில் தைப்பூசத்தின் போது கோயிலில் நடந்த கைகலப்பு காரணமாக ஒருவருக்கு மரணம் ஏற்பட்டதாக பரப்பப்படும் செய்தியை கோலா மூடா மாவட்ட காவல் துறைத் தலைவர் அஸ்லி அபு ஷா மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் மலேசியாகினியிடம் தெரிவித்ததாக அது செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, நேற்று திங்கட்கிழமை டுவிட்டர் பக்கத்தில் வெளியான அக்காணொளியில் இளைஞர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதில் ஒருவர் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இதே காணோளி வாட்சாப் போன்ற சமூகத் தளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டது.
இது தொடர்பாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் பிரிவு 233-இன் கீழ் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தும் உள்ளடக்கங்களைப் பகிர்ந்ததற்காக புகார் அறிக்கை தயாரிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
“இது ‘போலி செய்தி’. போலி தகவல்களை பரப்புவது குறித்து காவல் துறை புகார் அறிக்கையை உருவாக்குவோம்.”
“ஒரு சலசலப்பு ஏற்பட்டது, ஆனால் அது ஆபத்தானது அல்ல. இறப்புகள் இல்லை, யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறியதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.