Home One Line P2 செம்பனை எண்ணெய் மோதல் : இந்தியாவின் முடிவால் தடம் மாறும் வணிகப் பரிமாற்றங்கள்

செம்பனை எண்ணெய் மோதல் : இந்தியாவின் முடிவால் தடம் மாறும் வணிகப் பரிமாற்றங்கள்

1178
0
SHARE
Ad

கோலாலம்பூர் – உலகிலேயே அதிகமாக செம்பனை எண்ணெயை வாங்கும் நாடான இந்தியா, மலேசியாவின் செம்பனை எண்ணெயை வாங்குவதைக் குறைத்துக் கொள்ள எடுத்த முடிவால், உலகம் எங்கிலும் செம்பனை எண்ணைய் வணிகங்களின் பாதைகளும், நடைமுறைகளும் மாற்றங்களை எதிர்நோக்கி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மலேசியாவின் செம்பனை எண்ணெயை வாங்குவதை இந்தியா குறைத்ததால் அதன் தேவைகளில் ஏற்படக் கூடிய இடைவெளியைச் சரிசெய்யவும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும் முனைந்துள்ள இந்தோனிசியா, இந்தியாவுக்கான ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது.

இதனால், இந்தோனிசியாவால் கைவிடப்பட்ட மற்ற சில நாடுகளின் செம்பனை எண்ணெய் தேவையை அடையாளம் கண்டு பூர்த்தி செய்ய மலேசியா முனைந்துள்ளது.

#TamilSchoolmychoice

அதே வேளையில் செம்பனை எண்ணெயை மட்டும் நம்பி இருப்பதை விட்டு, உணவுக்காகப் பயன்படுத்தப்படக்கூடிய மற்ற வகை எண்ணெய் வளங்களுக்கு மாறுவதற்கும் இந்தியா முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உதாரணமாக, 2019 ஜனவரியோடு ஒப்பிடும்போது 2020 ஜனவரியில் சோயா எண்ணெய், சூரியகாந்தி (சன்பிளவர்) எண்ணெய் போன்ற செம்பனை அல்லாத எண்ணெய் பொருட்களின் ஏற்றுமதி இந்தியாவில் முறையே 40 விழுக்காடும், 51 விழுக்காடும் அதிகரித்திருக்கிறது. அதே வேளையில் ஜனவரியில் செம்பனையின் இறக்குமதி கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 27 விழுக்காடு குறைந்திருக்கிறது.

இந்தியாவின் நடவடிக்கை மலேசியாவைப் பாதித்துள்ளது என்பதை 2020 ஜனவரி மாத புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஜனவரி மாதத்தில் 46,876 டன் செம்பனை எண்ணெய் மட்டுமே இந்தியாவுக்கு மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு (2019) ஜனவரியோடு ஒப்பிடும்போது இது 85 விழுக்காடு வீழ்ச்சியாகும். 2011-ஆம் ஆண்டு முதற்கொண்டு ஒப்பிடும்போது இதுவே ஆகக் குறைவான இந்தியாவுக்கான செம்பனை ஏற்றுமதியாகும்.

இதுநாள்வரையில் மலேசியாவின் நான்கில் ஒரு பகுதி செம்பனை எண்ணெய் பொருட்களை இந்தியா வாங்கி வந்தது. கடந்த ஐந்தாண்டுகளில் மலேசியாவின் செம்பனை எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடாகவும் இந்தியா திகழ்ந்தது.

இதைத் தொடர்ந்து மலேசியாவும் பதில் நடவடிக்கையாக பாகிஸ்தான், சவுதி அரேபியா, கானா போன்ற நாடுகளுக்கான செம்பனை எண்ணெயை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முனைந்தது. வழக்கமாக இந்தோனிசியாவிடமிருந்து செம்பனை எண்ணெயை வாங்கி வந்த இந்த நாடுகள் கடந்த (2020) ஜனவரி மாதத்தில் மட்டும் மலேசியாவிலிருந்து தங்களின் செம்பனை இறக்குமதியை அதிகமாக உயர்த்தியிருக்கின்றன. 2019 ஜனவரியோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜனவரியில் இந்த நாடுகளின் செம்பனை இறக்குமதி மலேசியாவிலிருந்து 100 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்திருக்கின்றன.

மலேசியாவின் செம்பனை வணிகர்களும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தென்கிழக்காசியா போன்ற வட்டாரங்களில் தங்களின் சந்தை வாய்ப்புகளைத் தேடத் தொடங்கியுள்ளனர்.

பாகிஸ்தானைப் போன்றே, வங்காளதேசத்துக்குமான மலேசியாவின் செம்பனை ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இந்த இரு நாடுகளும் இதற்கு முன்னர் தங்களின் செம்பனை எண்ணெய் தேவைகளுக்காக இந்தோனிசியாவையே நம்பியிருந்தது.

ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட செம்பனை எண்ணெயை அதிக அளவில் கையிருப்பாக வைத்திருக்காத காரணத்தால், தற்போதைக்கு இந்தியாவின் முடிவால் மலேசியாவுக்கு பாதிப்பில்லை எனவும் மலேசிய செம்பனை எண்ணெய் வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆக, இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் காஷ்மீர் விவகாரம் தொடங்கி, செம்பனை எண்ணெய்வரை தொடரும் மோதல்களால் உலக அளவில் செம்பனை எண்ணெய் மீதான வணிகப் பாதைகள் மாறியிருப்பதோடு, செம்பனைக்கு மாற்றான எண்ணெய் பொருட்களின் தேவைகளும் அதிகரித்து – நாடுகளுக்கிடையிலான ஏற்றுமதி – இறக்குமதி கட்டமைப்புகளும் மாறி வருகின்றன.

– செல்லியல் தொகுப்பு