கோலாலம்பூர்: காவல் துறை பயங்கரவாத தடுப்புப் பிரிவின் (சிறப்பு கிளை) முதன்மை உதவி இயக்குநராக முதல் பெண் காவல் துறை அதிகாரி நோர்மா இஷாக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் பங்கரவாத தடுப்புக் பிரிவின் உதவி இயக்குனர் அயோப் கான் மைடின் பிச்சைக்குப் பதிலாக பணியாற்றுவார்.
அவரின் நியமனத்தை காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் இன்று உறுதிப்படுத்தியதாக சௌத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்ததாக மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2016 முதல் அயோப் கானின் துணைத் தலைவராக இருந்த நோர்மாவை “தைரியமானவர், திறன் படைத்தவர், அதிக தகுதி வாய்ந்தவர் மற்றும் மிக உயர்ந்த ஒருமைப்பாடு கொண்ட ஓர் அனுபவம் வாய்ந்த அதிகாரி மற்றும் ஒரு சிறந்த தளபதி” என்று ஹாமிட் விவரித்தார்.
அவர் டிசம்பர் 1991- இல் காவல் துறையில் நோர்மா இணைந்தார்.
மார்ச் 6 முதல் ஜோகூர் மாநில காவல்துறைத் தலைவராக அயோப் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
புக்கிட் அமானின் பயங்கரவாத எதிர்ப்புத் தலைவராக அயோப் கான் நீண்ட காலமாக தனது பதவியை வகித்து வருவதாகவும், மற்ற பிரிவுகளில் காவல் பணிகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் அப்துல் ஹாமிட் கூறியிருந்தார்.
“அவர் நீண்ட காலமாக இருக்கிறார். அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு நான் அவரை அங்கு அனுமதித்தால், மக்கள் அவரை ‘அயோப் பயங்கரவாதி’ என்று அழைப்பார்கள், ஏனென்றால் அவர் அதைத்தான் (பயங்கரவாதிகளைப் பிடிப்பது) செய்கிறார்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனிடையே, விடுதலைப் புலிகள் தொடர்பாக கைது மற்றும் வழக்குகளில் இப்புதிய அதிகாரின் அணுகுமுறை எவ்வாறு அமையப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.