கோலாலம்பூர்: முதியவர் ஒருவரை அடித்து கீழே தள்ளிய அரசு ஊழியரை சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஜே) தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.
இது தொடர்பான உள்விசாரணை நடத்தப்படும் வரையில் அவர் பணி ஓய்வில் இருப்பார் என்று எம்பிஎஸ்ஜே தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.
“விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், எம்பிஎஸ்ஜே தமது ஊழியரை அமலாக்க செயல்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்ளும். நியாயமான மற்றும் விரிவான உள்விசாரணை உடனடியாக நடத்தப்படும்” என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை எம்பிஎஸ்ஜேயின் முகநூல் பதிவில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய காணொளியில், சம்பந்தப்பட்ட நபர் போக்குவரத்து குற்றங்கள் செய்ததாகவும், அதன் பிறகு நடந்த வாக்குவாதத்தில் அந்த வயதானவர் அதிகாரியை அடிப்பது தெளிவாக இருப்பதாகவும் கூறினார். அதற்கு எதிர் தாக்குதலை அதிகாரி நடத்தியதும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
“அதே நேரத்தில், அமலாக்கக் குழு உறுப்பினரால் முதியவர் தாக்கப்பட்டது தீவிரமாகக் கருதப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷேல் எங் மீ ஸே, சம்பந்தப்பட்ட அதிகாரி அந்த நபரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
“அந்த நபர் அவரை குடையால் தாக்கிய போதிலும், அமலாக்க அதிகாரி தீவிரமாக நடந்திருக்கக்கூடாது ,” என்று அவர் கூறினார்.
பதட்டமான சூழ்நிலைகளைச் சமாளிக்க அனைத்து அமலாக்க அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, அந்த மனிதருடன் “நிலைமையை சரிசெய்ய” அவர் எம்பிஎஸ்ஜேக்கு அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையில், தொழிலாளர் சங்கத்தின் காங்கிரஸ் (சியூபேக்ஸ்) தன்னை தற்காத்துக் கொண்ட அந்த அதிகாரியை ஆதரித்துப் பேசியுள்ளது.
கியூபாக்ஸ் தலைவர் அட்னான் மாட் கூறுகையில் , அரசு ஊழியர்களின் கடமைகளை பொதுமக்கள் புரிந்துகொண்டு, சட்டத்தை மீறி அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்று கூறினார்.
அரசாங்கமும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த சம்பவத்தை மிகவும் நியாயமாகப் பார்க்க வேண்டும் என்றும், அரசு ஊழியர்களையும் சட்ட அமலாக்கத்தினரையும் தண்டிக்கக் கூடாது என்றும், ஒருதலைப்பட்சமாக இதனை பார்க்க வேண்டும் என்று அட்னான் கூறினார்.