ரெம்பாவ்: இம்மாத தொடக்கத்தில் நெடுஞ்சாலையின் நடுவில் இரண்டு வயது சிறுவன் வாகனத்திலிருந்து வீசி எறியும் அளவிற்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் இன்று செவ்வாய்க்கிழமை கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களான, 23 வயது, நபில் ஹாரிஸ் ஜெப்ரிடின் மற்றும் 20 வயது பி. தயாளன் ஆகியோர், நீதிபதி டான் சாய் வீ முன் தனித்தனியாக வாசித்தை குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
பிப்ரவரி 10-ஆம் தேதி பிற்பகல் 3.21 மணியளவில், குற்றம் சாட்டப்பட்ட இருவருமே ஆயர் கெரோ வடக்கு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் (பிளாஸ்) செனாவாங் செல்லும் பாதையில் தங்கள் காரை பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் முறையில் ஓட்டியதன் பேரில் கைது செய்யப்பட்டனர்.
சாலை போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987-இன் கீழ் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 15,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படும்.
முன்னதாக, அரசு தரசு தரப்பு வழக்கறிஞர் அமிரா நடாஷா அசார் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 7,000 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், நபில் ஹாரிஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் முகமட் பார்ஹான் அகமட் பாட்சில், தனது கட்சிக்காரர் ஒரு பல்கலைக்கழக மாணவர் என்றும், அவருக்கு வருமானம் இல்லை என்றும் கூறி ஜாமின் தொகையை குறைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
நீதிமன்றம் இருவருக்கும் தலா 4,000 ரிங்கிட் ஜாமீன் வழங்க அனுமதித்தது மற்றும் மார்ச் 17-க்கு வழக்கை ஒத்தி வைத்தது.