Home One Line P1 சூரிய சக்தி திட்டம் தேவையற்றது என சாட்சிய முரணை வெளிப்படுத்திய ரோஸ்மா வழக்கறிஞர்!

சூரிய சக்தி திட்டம் தேவையற்றது என சாட்சிய முரணை வெளிப்படுத்திய ரோஸ்மா வழக்கறிஞர்!

499
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சரவாக் கிராமப்புற பள்ளிகளுக்கு சூரிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த அமைச்சகம் விரும்பவில்லை என்று கல்வி அமைச்சின் முன்னாள் பொதுச் செயலாளர் மடினா முகமட் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அப்பள்ளிகளில் மின் கம்ப இணைப்புகள் இணைப்பது நிரந்தர தீர்வாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், சில பள்ளிகள் தொலைதூரப் பகுதிகளில் அமைந்திருப்பதால், டீசல் ஜென்செட்டைப் பயன்படுத்துவதே ‘மிகவும் சாத்தியமான’ தீர்வு என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சரவாக்கில் சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சூரிய சக்தி தொழில்நுட்பம் பொருத்தமானதல்ல, ஏனெனில் இது பெரும்பாலும் காடுகள் மற்றும் மரங்களால் மூடப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளது என்று மடினா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனிடையே, ரோஸ்மா மன்சோரின் வழக்கறிஞர், மடினா தமது கூற்றை மாற்றி கூறுவதாகவும் , அவர், நஜிப் ரசாக்கை பலிகடாவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

குறுக்கு விசாரணையின் போது ரோஸ்மா வழக்கறிஞர் அக்பெர்டின் அப்துல் காடிர் தொடர்ந்து எழுப்பிய கேள்விகளுக்கு மடினா இறுதியாக நீதிமன்றத்தில் முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டதாக ஒப்புக்கொண்டார்.

ரோஸ்மா விசாரணையில் ஆறாவது வழக்கு சாட்சியாக தோன்றிய மடினா, கல்வி அமைச்சின் சூரிய சக்தி திட்டத்தைக் காட்டிலும், டீசல் ஜெனரேட்டர்கள் சாத்தியமானது என்று ஆரம்பத்தில் விமர்சித்திருந்தார்.

உட்புறத்தில் உள்ள சில பள்ளிகளுக்கு சூரிய சக்தி திட்டங்கள் பொருத்தமானதாக இருக்காது, குறிப்பாக அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறாயினும், இது 2016-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதியிடப்பட்ட குறிப்பாணை ஒன்றில் கல்வி அமைச்சர் மகாதீர் காலிட்டிடம் தெரிவித்த கூற்று அல்ல என்று அக்பெர்டின் வலியுறுத்தினார்.

அக்பெர்டின்: என்னுடன் உடன்படுகிறீர்களா? , இன்று நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள், ஜென்செட் முக்கிய தீர்வு என்று.

ஜூன் 16-ஆம் தேதியன்று அமைச்சருக்கான உங்கள் குறிப்பில், சூரிய சக்தி ஒரு சிறந்த மாற்று என்று சொன்னீர்கள்.

எனவே, என்னுடன் உடன்படுங்கள் இது ஒரு தெளிவான முரண்பாடு என்று. ஏற்கிறீர்களா?

மடினா: உடன்படவில்லை.

அக்பெர்டின்: நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையா? நான் அங்குள்ள குறுகிய செய்தியை படித்தேன். புரிந்துகொள்வது எளிது. நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையா?

நீங்கள் சூரிய சக்தி திட்டத்தை ஆதரித்தீர்கள். இப்போது நீங்கள் ஜென்செட்டை ஆதரிக்கிறீர்கள்.

மடினா: இது சம்பந்தமாக முரண்பாடுகள் உள்ளன.

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதியன்று கல்வி அமைச்சின் பொதுச்செயலாளராக ஓய்வு பெறுவதற்கு முன்னர் சூரிய சக்தி திட்டத்திற்கான ஏற்றுக்கொள்ளும் கடிதத்தை மடினா ஆதரித்தார்.