Home One Line P2 “என் திறமையைக் காட்டட்டுமா? ரெண்டு சங்கதியை போடட்டுமா?” – மலேசியா வாசுதேவனை நினைவு கூர்வோம்

“என் திறமையைக் காட்டட்டுமா? ரெண்டு சங்கதியை போடட்டுமா?” – மலேசியா வாசுதேவனை நினைவு கூர்வோம்

1140
0
SHARE
Ad

(மலேசியாவிலிருந்து தமிழகம் சென்று தமிழ்த் திரையுலகில் நடிப்புத் துறையில் சாதனை படைத்தவர் இரவிச்சந்திரன் என்றால், இசைத் துறையில் சாதனைகள் பல புரிந்து, “மலேசியா” என்ற அடைமொழியை தன் பெயரிலேயே இணைத்துக் கொண்டு, நம் நாட்டின் புகழையும், பெருமையையும் நிலைநாட்டி, மலேசிய இசைக் கலைஞர்களுக்கும் தமிழகத் திரையுலகின் வாசல்கள் திறக்கும் – வரவேற்பும் – வாழ்த்தும் நல்கும் – என்பதை நிரூபித்துக் காட்டியவர் மலேசியா வாசுதேவன்.  கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி காலமான அவரை நினைவுகூரும் விதமாக மலேசிய எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரையை வெளியிடுகிறோம்)

“என் திறமையைக் காட்டட்டுமா? ரெண்டு சங்கதியை போடட்டுமா?” – இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் என்னவோ கவியரசு கண்ணதாசன்தான். ஆனால், குரல்வழி இவ்வரிகளுக்கு ஒலி வடிவம் தந்தவர் நமது மலையகத்தின் பன்முகக் கலைமகன் மலேசிய வாசுதேவன்தான்.

‘16 வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ என்று தொடங்கும் இப்பாடல், கவியரசுவின் பிற்காலப் பாடல்களில் குறிப்பிடத்தக்கது. அப்பாடலின் நிறைவில் இவ்வாறு வருவதைப் போல மலேசிய வாசுதேவன் கோடம்பாக்கத்தில் தன் முழுத் திறமையையும் காட்டினார்; இரண்டு சங்கதிகளை மட்டும் போடவில்லை; ஏராளமான சங்கதிகளையும் போட்டார்.

#TamilSchoolmychoice

வாசுதேவனின் தாயைத் தவிர, தந்தை மற்றும் உடன்பிறந்தோர் என அனைவரும் நடிப்பிலும் இசையிலும் நாட்டம் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட கலைக் குடும்பத்தின் கடைசி வாரிசான வாசுதேவன், இரத்தப் பேய் என்னும் மலேசியத் தயாரிப்பில் நடிப்பதற்காக கோடம்பாக்கத்திற்கு சென்றார்.

ஆனாலும் இரத்தப் பேய் என்னும் மலேசியத் தயாரிப்புக் குழுவினர் அனைவரும் தாயகம் திரும்பிவிட, இவர் மட்டும் கலைத் தாயின் அரவணைப்பில் நம்பிக்கை கொண்டு கோடம்பாக்கத்திலேயே தங்கி விட்டார்.

நாடக நடிகர், திரைப்பட நடிகர், பாடகர், இசை அமைப்பாளர், வசனகர்த்தா, எழுத்தாளர் என்றெல்லாம் பன்முகப் பாங்குடன் வலம் வந்தார் வாசு.

இசையில், குறிப்பாக பாடுவதில் பெருவிருப்பு கொண்டிருந்த வாசு, ஏதாவது இரண்டொரு பாடல்களையாவது யாரவது புகழ்பெற்ற இசை அமைப்பாளரின் இசையில் பாடிவிட்டால் போதும்; தன் பிறவிப்பயன் நிறைவேறி விடும். அதன்பின் மலேசியாவிற்கு திரும்பி விடலாம் என்று காத்திருந்து .. .. காத்திருந்து .. பாடுபட்ட இந்தக் கலைமகனின்மீது கலைத்தாயின் கடைக்கண் பார்வை கடைசியில் விழுந்தது.

அதைத் தொடர்ந்து மேடையிலும் திரையிலும் என ஏறக்குறைய எட்டாயிரம் பாடல்களைப் பாடிய வாசுதேவன், 85 திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.

தான் ஏற்ற குணசித்திர, வில்லன் வேடங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்திய மலையகக் கலைமகன் மலேசிய வாசுதேவன்.

மலேசியக் கலைக்குழுவினர் சென்னை சென்று தயாரித்த ‘இரத்தப் பேய்” என்ற திகில் படத்தில் நடித்த வாசுதேவன், அந்தப் படத்தின் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் இசையில் ஒரு பாடலையும் பாடும் வாய்ப்பைப் பெற்றார். ஆனால் அந்தப் படம் கடைசியில் வெளியிடப் படவில்லை. படம் முடிந்து படக் குழுவினர் எல்லாம் மலேசியாவிற்கு திரும்பிவிட, மலேசிய வாசுதேவனை மட்டும் கலை ஆர்வம் சென்னையிலேயே கட்டிப்போட்டுவிட்டது.

இரத்தப் பேய் படத்திற்கு ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத்தபோது, அவரிடம் கித்தார் வாசித்துக் கொண்டிருந்த இளையராஜாவுடன் நட்பு ஏற்பட்டதால், இளையராஜா நடத்திவந்த ‘பாவலர் பிரதர்ஸ்’ என்ற இசைக்குழுவில் வாசுதேவனும் இணைந்து பாடிவந்தார். இதனால் இளையராஜாவுடனான இவரின் நட்பு மிகவும் நெருக்கம் அடைந்தது.

இந்தச் சமயத்தில் ஜெய்சங்கர் நாயகனாக நடித்த ‘டெல்லி டு மெட்ராஸ்’ என்ற படத்தில், நாகேஷுக்காக ‘பாலு விக்கிற பட்டம்மா உன் பாலு ரொம்ப சுத்தம்மா’ என்று பாடிய பாடல்தான் வாசுதேவனினின் குரலில் தமிழ்த் திரையில் ஒலித்த முதல் பாடல்.

அதனையடுத்து, அவ்வப்போது ஒரு சில படங்களில் பாடியிருந்தாலும், மலேசிய வாசுதேவனை இரசிகர்களுக்கு அடையாளப்படுத்தும் அளவிற்கு பாடல் அமையவில்லை. மலேசியாவிற்குத் திரும்பி விடலாமா அல்லது கோடம்பக்கத்திலேயே வலம் வரலாமா என்ற குழப்பத்தில் இருந்தபோதுதான், பாரதிராஜா முதன்முதலாக இயக்கிய ‘பதினாறு வயதினிலே’ படம் தொடங்கப்பட்டது.

கங்கை அமரன் – மலேசியா வாசுதேவன் – எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

அதன் தொடக்க விழாவில் இசை அமைப்பாளர் இளையராஜாவுடன் இவரும் கலந்து கொண்டார். விழா முடிந்து அன்றைய தினமே பாடல் ஒலிப்பதிவும் இடம்பெறுவதாக இருந்தது. ‘செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா’ என்ற பாடலை பி.சுசீலாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடுவதாக இருந்தது. ஆனால், அன்றைய தினத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பேசுவதற்கே சிரமப்படும் அளவிற்கு கடுமையான தொண்டைக்கட்டு ஏற்பட்டு இருந்ததால், அவரால் பாட முடியவில்லை.

அதனால், “வேறு யாரையாவது வைத்து ‘ட்ரெக்’ எடுத்துக்கொள்ளுங்கள். நான் இன்னொரு நாளில் வந்து பாடிக் கொடுக்கிறேன்” என்றார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

உடனே இளையராஜா பாரதிராஜாவிடம் “வாசு இருக்கான்; அவனை வைத்து ‘ட்ரெக்’ செய்து கொள்ளலாம்” என்று கூறினார்.

வாசுவும் இராகத்திற்கு ஏற்ப பாடத் தயாரானார். அப்போது இளையராஜா வாசுவை தனியே அழைத்து, “சும்மா ‘ட்ரெக்’தானே பாடுகிறோம் என்று அலட்சியமாகப் பாடாதே. ஒலிப்பதிவு முடிந்து பாட்டு நன்றாக வந்தால், அதையே வைத்துக்கொண்டாலும் வைத்துக்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்ட வாசுவின் மனதில் புது உற்சாகம் பீறிட்டது. மிகுந்த அக்கறையுடன் ஒத்திகை பார்த்து, சிறப்பாக அந்தப் பாடலைப் பாடி முடித்தார்.

பாடலைக் கேட்ட பாரதிராஜா, “நல்லா பாடியிருக்கானேய்யா? இந்தக் குரலையே வெச்சுக்கலாம். முடிந்தால் அவனுக்கு இன்னொரு பாட்டும் கொடுக்கலாமே” என்று கூறியதையடுத்து, ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு’ என்ற பாடலையும் பாடும் வாய்ப்பு வழங்கப் பட்டது.

அந்த இரண்டு பாடல்களும் இரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டதால், வாசுதேவன் முழு நேரப் பாடகனாக வலம் வரத் தொடங்கினார். ஏறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் டி.எம்.சௌந்தரராஜன், திருச்சி லோகநாதன், சி.எஸ்.ஜெயராமன் ஆகியோரின் குரலைப் பிரதிபலித்து அந்தந்த நடிகர்களுக்கு ஏற்ப பாடினார்.

பாரதிராஜாவின் இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் இளையராஜாவின் இசையில் பாடிய ‘கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ? இங்கு வந்ததாரோ?’ என்ற பாடல் வாசுதேவனுக்கு சிறந்த பாடகருக்கான தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதைப் பெற்றுக் கொடுத்தது.

திரைப்படத் துறையில் சாதித்துவிட்ட பெருமிதத்துடனும் உற்சாகத்தோடும் மலேசியாவுக்குத் திரும்பிய வாசுதேவனுக்கு பிறந்த மண்ணில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

கோடம்பாக்கத்திற்குத் திரும்பி கலைப்பயணத்தைத் தொடர்ந்தார் வாசு. பொள்ளாச்சி ரத்தினம் என்ற தயாரிப்பாளர் ‘சாமந்திப்பூ’ என்ற படத்திற்கு வாசுவை இசையமைப்பாளராக ஆக்கினார். அதையடுத்து ‘பாக்கு வெத்திலை’, ‘உறவாடும் நெஞ்சம்’, ‘உறவுகள்’, ‘கொலுசு’ ஆகிய படங்களுக்குத் தொடர்ச்சியாக இசையமைத்தார் வாசு. ஆனால், எம்.எஸ்.விசுவநாதன், இளையராஜா ஆகியோரை மீறி இவரால் இசைத் துறையில் அந்த அளவிற்கு பெயரீட்ட முடியவில்லை. எனவே, மீண்டும் பாடகனாக மட்டுமே தொடர முடிவு செய்தார்.

இந்த வேளையில் ‘கொலுசு’ படத்திற்கு இவர் இசையமைத்துக் கொண்டிருந்தபோது, வாசுதேவனின் நடிப்பு ஆசையைத் தெரிந்துகொண்ட இயக்குநர் கே.எஸ்.மாதங்கன், இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறீர்களா?’ என்று கேட்டுள்ளார். உடனே ஏற்றுக்கொண்டு ஆர்வமாக நடித்தார்.

இவர் நடிக்கும் விஷயம் கேள்விப்பட்டு பாரதிராஜா, அவர் இயக்கிய ‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக, ‘ஊமை விழிகள்’, ‘சிறைப்பறவை’, ‘முதல் வசந்தம்’, ‘பாலைவன ரோஜாக்கள்’ என்று எண்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஒரு நடிகராகவே வலம் வந்தார் வாசு.

ரஜினிகாந்தின் ‘தர்மயுத்தம்’ படத்தில் ‘ஆகாய கங்கை பூந்தேன் மலர் தூவ’ என்ற பாடலையும், ‘ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு’ என்ற பாடலையும் பாடினார். இவை இரண்டும் மிகவும் பிரபலமடைந்ததால், மீண்டும் பாடும் வாய்ப்புகள் வாசுதேவனை தேடிவந்தன. ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, ‘ஆசை நூறு வகை’ என்று வாசு ரஜினிகாந்துக்காகப் பாடிய ஏராளமான பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன .

சிவாஜி கணேசன் நடித்த ‘இமைகள்’, ‘வெள்ளை ரோஜா’, ‘முதல் மரியாதை’, ‘ரிஷிமூலம்’ போன்ற படங்களிலும் கமலஹாசனின் ‘சங்கர்லால்’, ‘சகலகலா வல்லவன்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புன்னகை மன்னன்’, ‘தேவர் மகன்’ ஆகிய படங்களிலும் பாடி பெருமை கொண்டவர் மலேசிய வாசுதேவன்.

இயக்குநர் மணிரத்னத்திடம் பாராட்டு பெறும் மலேசியா வாசுதேவன்

கோடம்பாக்கத்தில் தொடக்க காலத்தில் வெறுமையுடன் நாட்களைக் கழித்த மலேசிய வாசுதேவன், அடுத்தடுத்த காலத்தில் அதே கோடம்பாக்கத்தில் பெருமையுடன் வலம் வந்தார்.

ஆனாலும் கோடம்பாக்கத்திற்கே உரிய தனிப் பரிமாணம் என்னவென்பதை எடைபோடத் தவறினார் மலேசிய வாசுதேவன். பாம்பு சட்டை (தோலை) உரிப்பதைப் போல அடுத்தடுத்த நகர்வை எட்டிக் கொண்டே இருக்கும் அந்த கலைக் கோட்டை.

கோடம்பாக்கத்தில் நிறைய சம்பாதித்த வாசுதேவன், கலைப் பயணத்தை உயிர் மூச்சாகக் கொண்டதாலோ என்னவோ, ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்பு மங்கியபோது, அந்த நேரத்தில் சுதாரிக்கவும் தனக்கான அடுத்தக் கட்டம் எதுவென்பதையும் தெளிவாகத் தீர்மானிக்கத் தவறி சொந்தப்படம் எடுக்க முனைந்தார்.

அந்த முயற்சியில் சறுக்கலையும் எதிர்கொண்டார் வாசு.

1944-இல் பிறந்து 67 அகவை வரை வாழ்ந்து எத்தனையோ சாதனைகளைப் படைத்த கலைமகனான மலேசிய வாசுதேவன், இம்மலையகத்தின் கலை வெளிப்பாடு என்பதில் நமக்கெல்லாம் பெருமைதான்.

அப்படிப்பட்ட பன்முகத் திறன்களும், பெருமைகளும் கொண்ட வாசுதேவன், 2011-ஆம் ஆண்டில் இதே நாளில் (பிப்ரவரி 20) தன் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்தார்.

ஆனாலும் அவரின் இசையோசை நம் செவிகளில் இன்றும், என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

-நக்கீரன்