கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்று தோன்றியதிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை இன்னும் ஒரு சாதாரண போக்கைக் காட்டுவதாகவும், வியத்தகு அளவில் பணி நீக்கங்கள் செய்யப்படவில்லை என்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 18 நிலவரப்படி, சுமார் 8,588 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும், மேலும் அவர்களுக்கு உதவ சமூக பாதுகாப்பு அமைப்பு (பெர்கெசோ) 21 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கொவிட் -19 பாதிப்பு இந்த ஆண்டு இறுதி வரை தொடர்ந்தால் 100,000 மலேசியர்கள் வேலை இழக்க நேரிடும் என்று மலேசிய கூட்டரசு முதலாளிகள் கூட்டமைப்பின் (எம்இஎப்) நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாம்சுடின் பார்டான் கூறியிருந்ததில் உண்மையில்லை என்று அது தெரிவித்துள்ளது.
“இந்த மதிப்பீடுகள் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும், கோவிட் -19 அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்ள நாட்டின் தொழிலாளர் சந்தையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை” என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
ஓர் ஊழியரை பணிநீக்கம் செய்வது ஒரு முதலாளி எடுக்கக்கூடிய கடைசி படியாகும் என்றும் எந்தவொரு தரப்பினரும் ஓர் ஊழியரை சட்டத்திற்கு இணங்காமல் தன்னிச்சையாக பணிநீக்கம் செய்வதில் அமைச்சகம் சமரசம் செய்யாது என்றும் மனிதவள அமைச்சு வலியுறுத்தியுள்ளது.