Home One Line P1 “சட்டத்துறை தலைவரின் முடிவை அனைவரும் மதிக்க வேண்டும்” – எம்.ஏ.பி. சட்ட ஆலோசகர் கார்த்திகேசன் சண்முகம்

“சட்டத்துறை தலைவரின் முடிவை அனைவரும் மதிக்க வேண்டும்” – எம்.ஏ.பி. சட்ட ஆலோசகர் கார்த்திகேசன் சண்முகம்

1223
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நீண்ட காலமாக செயல்படாத விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பிருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட பன்னிரண்டு பேரையும் விடுதலை செய்வதாக அரசாங்க தலைமை வழக்கறிஞர்(அட்டர்னி ஜெனரல்) செய்த முடிவை யாரும் அரசியல்படுத்த வேண்டாம் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்.ஏ.பி.) கேட்டுக் கொள்வதாக அதன் சட்ட ஆலோசகர் கார்த்திகேசன் சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

“அரசியல் சாசனமும் குற்றவியல் நடைமுறைக் குறியீட்டு விதிகளும் தெளிவாக உள்ளன. அட்டர்னி ஜெனரலுக்கு எந்தவொரு கிரிமினல் வழக்கைத் தொடரவும் குறிப்பிட்ட வழக்கை மீட்டுக் கொள்ளவும் முழு அதிகாரம் உள்ளது. இது குறித்து எங்கும் எவரும் கேள்வி எழுப்ப முடியாது. அட்டர்னி ஜெனரல் தன்னுடைய அதிகாரத்தை சூழலுக்கும் சட்ட முறைமைக்கும் ஏற்ப பயன்படுத்துவத்தை காமன்வெல்த் நீதிபரிபாலனமும் வரையறுத்துள்ளது” எனவும் கார்த்திகேசன் தான் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்வழி தெரிவித்திருக்கிறார்.

“இப்படிப்பட்ட சூழலில் பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினர்  முஸ்ஸாமில் சட்டத்துறைத் தலைவரின் முடிவைத் திரித்துக் கூற வேண்டாம் என்றும் இதை இன-சமய விவகாரமாக மாற்ற வேண்டாம் என்றும் மலேசிய முன்னேற்றக் கட்சி கேட்டுக் கொள்கிறது. அத்துடன், உள்துறை அமைச்சர்  மொகிதின் யாசினின் இசைவு இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவு அல்ல இது. அதிகாரத்திற்கும் சட்ட நடைமுறைக்கும் அப்பாற்பட்டு நம் பிரதமர் செயல்படுவதை நாம் மதிக்க வேண்டும். இதைப்போல, சட்டத்துறைத் தலைவரின் அதிகார வரம்பை அறியாமல், அவர் பதவி விலக வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவு கேட்டிருப்பதும் தவறான போக்காகும்” என்றும் கார்த்திகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“சம்பந்தப்பட்ட 12 பேரும் விடுதலைப் புலிகள் நடவடிக்கைக்கு உயிரூட்டுவதாகவும் அந்த இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக விளங்குவதாகவும் கூறி தீவிரவாத நடவடிக்கைக்கு எதிரான காவல் பிரிவு தலைவர் டத்தோ அயூப் கான் மைடின் பிச்சை நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். இது குறித்து காவல் துறையிடம் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் அடித்துப் பேசினார். ஆனால், இதுவரை அப்படிப்பட்ட ஒரேயொரு ஆதாரத்தைக் கூட நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை” என்பதையும் கார்த்திகேசன் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

மலேசியக் குடிமகன் ஒருவர் கூட காரணமின்றியோ, ஆதாரமின்றியோ அல்லது பலவீனமான சாட்சியுடனோ கைதுசெய்யப்படக் கூடாதென்றும் கார்த்திகேசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.