Home One Line P1 “விக்னேஸ்வரனின் தூரநோக்கு வியூகத்திற்கும், மஇகாவின் தொடர் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி”

“விக்னேஸ்வரனின் தூரநோக்கு வியூகத்திற்கும், மஇகாவின் தொடர் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி”

1319
0
SHARE
Ad
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் பணியாற்றிய மஇகா வழக்கறிஞர்கள் குழு – வலமிருந்து இரண்டாவதாக இருப்பவர் ஆர்.டி.இராஜசேகரன்…

கோலாலம்பூர் – விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 12 பேர்களின் மீதான குற்றச்சாட்டுகள் மீட்டுக் கொள்ளப்பட்டு, விடுதலை செய்யப்படுவதாக அரசாங்கத்தின் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் எடுத்துள்ள நியாயமான – நீதியான – மஇகா எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ள – முடிவுக்கு, மஇகாவின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மஇகா சட்டப் பிரிவுத் தலைவர் ஆர்.டி.இராஜசேகரன் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 22) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

“விடுதலைப் புலிகள் விவகாரத்தில் 12 பேர்கள் கைது செய்யப்பட்ட நாள்முதல் நமது மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தூரநோக்கு வியூக சிந்தனையோடு விடுத்து வந்த அறைகூவல்களுக்கும், வெறும் வாய்வார்த்தைகளோடு நின்று விடாமல் அடுத்தடுத்து எடுத்த செயல் நடவடிக்கைகளுக்கும், அணுகுமுறைக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகவே இந்த 12 பேர்களின் விடுதலை அமைந்திருக்கிறது என்பதையும் இவ்வேளையில் வலியுறுத்த விரும்புகிறேன். தொடக்கம் முதலே, ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது வேறு, ஆனால், இராணுவ அட்டூழியங்களால் கொல்லப்பட்ட மக்களுக்கு அனுதாபம் காட்டுவதும், அந்தப் போராட்டங்களால் மறைந்த தலைவர்களின் தியாகத்தை மதிப்பதும் நினைவு கொள்வதும் என்பது வேறு என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது தொடர் அறிக்கைகளால் ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தார். அதே அடிப்படையில்தான் சட்டத் துறைத் தலைவர் டோமி தோமசின் முடிவும் அமைந்திருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்” என்றும் இராஜசேகரன் மேலும் கூறியுள்ளார்.

“நம்பிக்கைக் கூட்டணியின் இந்தியத் தலைவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்த வேளையில், நமது தேசியத் தலைவர்தான் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து துணிச்சலுடன் தொடர்ந்து அறிக்கைகள் விடுத்தார். மேலும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வெறும் அறிக்கைகளால் மட்டும் நின்று விடாமல் செயல் நடவடிக்கைகளிலும் இறங்கினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு தொடர்பு கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து உதவி செய்ததோடு, அவர்களுக்கு மஇகா சட்டப் பிரிவின் வழி சட்ட உதவிகளையும் வழங்கினார். குறிப்பாக, கைது செய்யப்பட்டவர்களில் எஸ்.தீரன், ஏ.கலைமுகிலன், எஸ்.தங்கராஜ், எம்.பூமுகன் ஆகியோருக்காக மஇகா சார்பில் கட்டணம் செலுத்தி சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரான டத்தோ கமாருல் அவர்களை நியமித்தார். மேலும் மஇகா சட்டப்பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் யோகேஸ், கீர்த்திராஜ், மதன், அகிலன் ஆகியோர் எனது தலைமையில் தங்களின் சேவைகளை வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் மஇகா சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் இராஜசேகரன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“மஇகா ஆளும் கட்சியாகச் செயல்பட்டபோதும், இன்றைக்கு எதிர்க்கட்சியாக செயல்படும்போதும், இந்திய சமுதாயத்திற்கு ஏற்படும் எந்த ஓர் இன்னலுக்கும் தோள் கொடுத்து துணை நிற்கும் என்பதற்கான இன்னொரு உண்மையான உதாரணம், விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மஇகா தேசியத் தலைவர் விடுத்த அறைகூவல்களும், எடுத்த நடவடிக்கைகளும் ஆகும். இந்திய சமுதாயத்திற்கு எந்த விதத்திலோ, எந்த உருவத்திலோ பிரச்சனைகள் வந்தாலும் மஇகா தயங்காது தொடர்ந்து போராட்டக் களத்தில் நிற்கும் என்பதையும் இந்தியர்களுக்கு இந்த வேளையில் வலியுறுத்த விரும்புகிறேன்” என்றும் இராஜசேகரன் தெரிவித்துள்ளார்.