கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த 12 பேரின் வழக்கு விசாரணையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது கொல்லப்பட்ட வேலுபிள்ளை பிரபாகரன் மற்றும் பிற விடுதலைப் புலிகள் தலைவர்கள் ஆகியோரின் புகைப்படம் ஒவ்வொன்றும் தங்களது கைபேசி அல்லது முகநூல் கணக்கில் அவர்கள் வைத்திருப்பதாக 11 பக்க ஊடக அறிக்கையில் தோமஸ் கூறினார்.
“அத்தகைய செயல் ஒரு குற்றவியல் செயலாகக் கருதப்படுமானால், அது சட்டத்தை அவமரியாதைக்குரியதாகும்.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
34 குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் எவருக்கும் தண்டனை வழங்குவதற்கான தெளிவான ஆதாரம் இல்லை என்று தோமஸ் தெரிவித்துள்ளார்.
“எனவே, மத்திய அரசியலமைப்பின் 145 (3)-வது பிரிவின் கீழ் எனது விருப்பப்படி செயல்படுவதில், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.
அவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.