கோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கலைக்கப்பட்டு, மகாதீரின் தலைமையில் புதிய கூட்டணி அரசாங்கம் தோற்றுவிக்கப்படும் என நேற்று பிற்பகல் முதல் பரவத் தொடங்கிய செய்திகளைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் மலேசிய இணையவாசிகள் தங்களின் விருப்புகளையும், வெறுப்புகளையும் சரமாரியாக வெளியிடத் தொடங்கியுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலோர் மகாதீர் – அஸ்மின் அலி இருவருக்கும் எதிரான கருத்துகளையே பதிவு செய்தனர்.
மக்களின் விருப்பத்திற்கு மாறாக துரோகம் செய்து விட்டனர், கீழறுப்பு வேலைகள் செய்துவிட்டனர், என்பது போன்ற கோணங்களில் பலரும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி தங்களின் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
மலேசிய இணையவாசிகளின் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது, மகாதீர்-அஸ்மின் அலி இருவரும் அம்னோ-தேசிய முன்னணி தரப்பினருடன் இணையும் முடிவுக்குக் கடுமையான கண்டனங்களும், மக்களிடையே கொந்தளிப்பும் ஏற்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
எனினும், தேசிய முன்னணிக்கு ஆதரவான அம்னோ, மசீச, மஇகா வட்டாரங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் எங்கும் காணப்படுவதோடு, இந்தக் கட்சிகளுக்கு ஆதரவான இணைய வாசிகள் தாங்கள்தான் அடுத்த ஆட்சியை அமைக்கப் போகிறோம் என்ற களிப்பில் இருப்பது நன்கு தெரிகிறது.
ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் துணைப் பிரதமரா?
இதற்கிடையில், தேசிய முன்னணிக்கு ஆதரவான இணையத் தளங்களில், அடுத்த புதிய அமைச்சரவை குறித்த பட்டியலே வெளியாகியிருக்கிறது.
அதன்படி, துன் மகாதீர் பிரதமராகவும், ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் (படம்) துணைப் பிரதமராகவும் நியமிக்கப்படுவர் என்ற ஆரூடங்கள் நிலவுகின்றன.
மசீசவின் வீ கா சியோங், மஇகாவின் துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம் பெறுவர் என்ற ஆரூடங்களும் வெளியிடப்படுகின்றன.
தற்போது பிரதமர் துறை அமைச்சராக இருக்கும் வேதமூர்த்தியின் நிலைப்பாடு இன்னும் தெரியவில்லை.