இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் உள்ளிட்ட தலைவர்கள் ஜசெக மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து சேரத் தொடங்கியுள்ளனர்.
ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், தற்போது பிரதமர் துன் மகாதீரைச் சந்திக்கும்பொருட்டு அன்வாருடன் இணைந்து பிரதமரின் இல்லம் அமைந்திருக்கும் செர்டாங் மைன்ஸ் வளாகத்திற்கு சென்றிருக்கிறார்.
அன்வார் இப்ராகிம், லிம் குவான் எங், முகமட் சாபு உள்ளிட்ட குழுவினர் பிரதமர் அலுவலகத்திற்கு இன்று காலை 9.22 மணியளவில் சென்றாலும் அங்கு பிரதமர் இல்லாத காரணத்தால் அங்கிருந்து செர்டாங் மைன்ஸ் வளாகத்தில் அமைந்திருக்கும் பிரதமர் இல்லத்திற்கு சென்றனர்.
மகாதீரின் இன்றைய அனைத்து முன்கூட்டிய சந்திப்புகளும், நிகழ்ச்சி நிரல்களும் இன்று இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையில் மகாதீருடனான சந்திப்புக்குப் பிறகு லிம் குவான் எங் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு ஜசெகவின் அவசரக் கூட்டத்தில் வந்து கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாதீரைச் சந்தித்த பின்னர் அன்வார் இப்ராகிம் நேரடியாக மாமன்னரைச் சந்திக்கச் செல்வார் என்றும் அவரை பிற்பகல் 2.30 மணிக்குச் சந்திக்க மாமன்னர் ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.