Home One Line P1 “மாமன்னர் முன் இருக்கும் தேர்வுகள் என்ன? அடுத்து என்ன செய்வார்?” – வழக்கறிஞர் ஜி.கே.கணேசன் செல்லியலுக்கு...

“மாமன்னர் முன் இருக்கும் தேர்வுகள் என்ன? அடுத்து என்ன செய்வார்?” – வழக்கறிஞர் ஜி.கே.கணேசன் செல்லியலுக்கு வழங்கும் விளக்கம்

889
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான ஜி.கே.கணேசன் (படம்) தனது வலைத் தளத்தில் தொடர்ந்து சட்டப் பிரச்சனைகள் குறித்தும், நாட்டில் அவ்வப்போது நிகழும் சம்பவங்கள் மீதான சட்ட சிக்கல்கள் குறித்தும் விரிவாக எழுதி வருபவர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்கள், மாமன்னர் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தனித் தனியாகச் சந்தித்து அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என விளக்கம் கேட்டு வருவது – போன்ற சூழ்நிலையில் அடுத்து மாமன்னரின் முன் இருக்கும் தேர்வுகள் என்ன, அடுத்து அவர் என்ன செய்வார் என்பது குறித்து செல்லியல் சார்பாக கணேசனிடம் விளக்கம் கேட்டோம்.

வழக்கறிஞர் ஜி.கே.கணேசனின் வலைத் தளம்

செல்லியல் ஊடகத்திற்கென அவர் பிரத்தியேகமாக முன்வைத்த கருத்துகளின் தொகுப்பை – சாராம்சத்தை – வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அவரது கருத்துகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • நாட்டின் ஏழாவது பிரதமராக பதவி வகித்த துன் மகாதீரின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது அவர் மீண்டும் இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
  • எனினும், மலேசிய அரசியல் அமைப்புச் சட்டங்களில் “இடைக்காலப் பிரதமர்” என்ற பதவிக்கு இடமில்லை. எனவே, சட்டத்தைப் பொறுத்தவரை மகாதீர் மாமன்னரால் நாட்டின் எட்டாவது பிரதமராக நியமிக்கப்பட்டு விட்டார். அதற்கான பதவியேற்பு சடங்கு பாரம்பரிய முறைப்படி நடைபெறவில்லை. அவ்வளவுதான்.
  • 221 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் விளக்கம் கேட்ட பின்னர், மாமன்னருக்கு அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரை அடுத்த பிரதமராகத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்ற தெளிவு கிடைக்கும்.
  • அந்தப் பிரதமர் மகாதீர் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. காரணம், வெளிவரும் தகவல்களின்படி பெரும்பான்மையான உறுப்பினர்கள் மகாதீர் பிரதமராகத் தொடர்வதையே விரும்புகிறார்கள். இன்னொரு பொதுத் தேர்தலை யாரும் விரும்பவில்லை.
  • எனவே, பெரும்பான்மை ஆதரவை மகாதீர் பெற்றிருப்பதால், அடுத்த அமைச்சரவையை அமைக்க மகாதீரை மாமன்னர் அழைப்பார்.
  • இங்குதான் இன்னொரு சுவாரசியம் நிகழப் போகிறது. மகாதீருக்கு, பிரதமர் என்ற முறையில் இப்போது எந்தவிதக் கட்டுப்பாடுகளும், பக்காத்தான் ஹரப்பான் எனப்படும், நம்பிக்கைக் கூட்டணியின் அழுத்தமும் அவருக்கு இல்லை. பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் அவர் விலகி விட்டதால், பெர்சாத்து கட்சியினரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற அவசியமும் அவருக்கு இல்லை.
  • எனவே, அவர் புதிய அமைச்சரவையை அமைக்கும்போது தனக்கு ஏற்ற, தன்னுடன் இணைந்து பணியாற்றக் கூடிய யாரையும் அவரால் அமைச்சராகத் தேர்வு செய்ய முடியும். அரசியல் கட்சிகளுக்கு வெளியில் இருந்தும் அவர் அமைச்சர்களை நியமிக்க முடியும். அண்மைய சில நாட்களில் அரங்கேறியுள்ள சம்பவங்கள் அந்த சுதந்திரத்தை அவருக்கு வழங்கியிருக்கின்றன.
  • 14-வது பொதுத்தேர்தலில் சீர்திருத்தங்களுக்காக மக்கள் வாக்களித்தார்கள், நம்பிக்கைக் கூட்டணிக்குத்தான் வாக்களித்தார்கள் என்பதை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு மகாதீர் தனது அமைச்சரவைத் தேர்வுகளைச் செய்ய வேண்டும் என்று மட்டுமே மக்கள் எதிர்பார்ப்பார்கள். மாறாக, அம்னோ போன்ற கட்சிகளுடன் இணைந்து அமைச்சரவை அமைக்கப்படுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள் – மகாதீருக்கும் அது நன்கு தெரியும் – என்பதையும் விளக்கத் தேவையில்லை.

மகாதீர் பிரதமர் பொறுப்பை ஏற்க மறுத்தால்….?

  • ஒருவேளை மகாதீர் மீண்டும் பிரதமர் பொறுப்பை ஏற்க மறுத்தால் மட்டுமே மாமன்னர் அடுத்த கட்டத் தேர்வு என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டியிருக்கும். மகாதீர் மீண்டும் பிரதமர் பொறுப்பில் அமர்ந்து கொள்ள உடன்பட்டு விட்டால், பிரச்சனை முடிந்தது.
  • ஆனால், நாட்டில் எழுந்திருக்கும் அரசியல் குழப்பங்கள், பின்கதவு வழியாக ஆட்சி அமைக்க முற்படும் சில அரசியல் சக்திகள் என்ற சூழலில் நாட்டின் நலனுக்காக – நாட்டுக்கான தியாகமாக – மகாதீர் மீண்டும் பிரதமராக அமர்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
  • மகாதீர் பிரதமராக பதவியேற்க ஒப்புக் கொள்ளவில்லை என்றால், மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்படுமாயின் அதற்காக ஏற்படப் போகும் கோடிக்கணக்கான செலவுகள், ஏற்கனவே பொருளாதார சரிவில் இருக்கும் நமது நாட்டில் பெரும் நிதிச் சுமையை தேவையில்லாமல் ஏற்படுத்தும். அத்துடன் நம்பிக்கைக் கூட்டணி அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளவேண்டும் என்றே மக்கள், மகாதீர் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்தார்கள் என்பதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் மகாதீர் பிரதமராகத் தொடர்வது மக்கள் கருத்துகளுக்கு விரோதமான செயலாகப் பார்க்கப்படாது.
  • எனவே, மகாதீரை எட்டாவது பிரதமராகக் கொண்டு, புதிய அமைச்சரவை அமைக்கப்படும் சாத்தியமே அதிகமாக இருக்கிறது. அவ்வாறு அமைக்கப்பட்டால், நம்பிக்கைக் கூட்டணியின் முந்தைய பதவிப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் அனைத்தும் செல்லாததாகி விடும். மகாதீர் விரும்பும்வரை பிரதமர் பதவியில் தொடரலாம்.
#TamilSchoolmychoice

மேற்கண்டவாறு வழக்கறிஞர் ஜி.கே.கணேசன் தனது சட்ட ரீதியானக் கருத்துகளை செல்லியலிடம் முன்வைத்தார்.

-தொகுப்பு : இரா.முத்தரசன்