சென்னை,ஜன.23- தி.மு.க., தலைவர் கருணாநிதியின், முதல் கொள்ளு பேத்தி அமுதவல்லி திருமணம், சென்னையில் இன்று நடக்கிறது. அதில், “குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்று, குடும்ப ஒற்றுமையை, கட்சியினருக்கு பறைசாற்ற வேண்டும். திருமணத்தை புறக்கணித்தால், அவர்களிடம் பேசுவதை நிறுத்திக் கொள்வேன்’ என, கருணாநிதி கட்டளையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மத்திய அமைச்சர் அழகிரி, நேற்று காலை, கோபாலபுரம் வீட்டில், கருணாநிதியை சந்தித்து பேசினார். இருவரின் சந்திப்பால், இரு வாரங்களாக, அவர்களின் மத்தியில் நிலவிய, பனிப்போர் விலகியது.இம்மாதம், 3ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில், “தமிழ் சமுதாய மேன்மைக்காக, எனக்கு பின் ஸ்டாலின் பாடுபடுவார்’ என, கருணாநிதி பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “தி.மு.க., மடம் அல்ல’ என, மத்திய அமைச்சர் அழகிரி பதிலளித்தார்.
இதையடுத்து, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், “தலைமைக்கு எதிராக யாராவது பேசினால், நடவடிக்கை எடுக்கப்படும்’ என, கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார்.
அதோடு, “தலைவர் பதவிக்கு ஸ்டாலின் போட்டியிட்டால், நான் முன்மொழிவேன்’ எனக் கூறி, தனக்கு பின், அடுத்த தலைவர் ஸ்டாலின் என்பதை, திட்டவட்டமாக கருணாநிதி தெரிவித்தார்.
கருணாநிதியின் கோபத்தை தணிக்கும் வகையில், அவரை சந்தித்து பேச அழகிரி விரும்பினார். ஆனால், அழகிரியை, கருணாநிதி தவிர்த்தார். அவர்கள் இருவரிடமும், உறவினர்கள் அமிர்தம், செல்வம் ஆகியோர் சமரச பேச்சு நடத்தினர். இருப்பினும், இரு வாரங்களாக அவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை.
இம்மாதம், 17ம் தேதி, கருணாநிதியின் மூத்த மகன் முத்துவின் பேத்தி, அமுதவல்லிக்கும், போலீஸ் டி.ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன் மகன், சித்தார்த்துக்கும், சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள முத்துவின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது.
அதில், கருணாநிதி, ராஜாத்தி, ஸ்டாலின், துர்கா பங்கேற்றனர். தயாளு, அழகிரி, அவரது மனைவி காந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை. கருணாநிதியை பொறுத்தவரையில், அவரது மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகளின் திருமணம் மற்றும் தனது சொந்தங்களின் இல்ல திருமணங்களையும் நடத்தி வைத்துள்ளார்.
தன் முதல் கொள்ளு பேத்தியின் திருமணத்தை, கருணாநிதி இன்று காலை நடத்தி வைக்க இருப்பதால், கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த திருமணத்தை, தன் வாழ்நாளில் முக்கியமான நாளாக அவர் கருதுகிறார். கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் மகன் முத்து. பத்மாவதி உயிரோடு இல்லை என்பதால், அவரது இடத்தில், தயாளு, ராஜாத்தியும் இருந்து, மணமக்களை வாழ்த்த வேண்டும் என, கருணாநிதி கட்டளையிட்டுள்ளார்.
அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, செல்வி, கனிமொழி குடும்பத்தினரும், மணமக்களுடன் மேடையில் ஒன்றாக நின்று, குடும்ப போட்டோ எடுக்க வேண்டும். தன் குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவரும், ஒன்றுபட்டு விட்டனர் என்பதை, கட்சியினருக்கு பறைசாற்ற வேண்டும் என, கருணாநிதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதனால், அமெரிக்காவில் வசிக்கும், அழகிரியின் இரண்டாவது மகள் அஞ்சுகச்செல்வியிடம், தொலைபேசியில் கருணாநிதி தொடர்பு கொண்டு, கொள்ளு பேத்தி திருமணத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
அஞ்சுகச்செல்வி உடனே புறப்பட்டு வர இயலாது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.அதற்கு கருணாநிதி, “அடுத்த கொள்ளு பேத்தி திருமணத்திற்கு, நான் உயிரோடு இருப்பேனா என்பது தெரியாது. எனவே, இந்த திருமணத்தில் நமது உறவினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். திருமணத்திற்கு யாராவது வரவில்லை என்றால், அவர்களிடம் நான் பேச மாட்டேன்’ என, கண்டிப்பாக கட்டளை விடுத்ததாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.