Home One Line P1 டோமி தோமஸ் சட்டத்துறைத் தலைவர் பதவியைத் துறந்தார்

டோமி தோமஸ் சட்டத்துறைத் தலைவர் பதவியைத் துறந்தார்

713
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டில் தொடர்ந்து வரும் அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து சட்டத் துறைத் தலைவர் பதவியை டான்ஸ்ரீ டோமி தோமஸ் துறந்தார். தனது பதவி விலகல் கடிதத்தை அவர் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) இடைக்காலப் பிரதமர் துன் மகாதீரிடம் வழங்கினார் என ஊடகங்கள் தெரிவித்தன.

நாட்டின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான அவர் நீண்ட காலமாக வழக்கறிஞராகப் பணியாற்றி, பல்வேறு முக்கிய வழக்குகளைக் கையாண்டு வெற்றி பெற்றார்.

அரசியலமைப்பு மீதிலான சட்டங்களில் திறன்வாய்ந்த வழக்கறிஞர் என்ற முறையில் நாட்டில் கடந்த காலத்தில் பல அரசியலமைப்பு வழக்குகளை அவர் கையாண்டிருக்கிறார். அந்தத் திறமைகள் காரணமாக, நாட்டின் சட்டத் துறைத் தலைவராக அவர் 2018-ஆம் ஆண்டில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நியமிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிறிஸ்துவரான அவரது நியமனம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஒருசில மலாய் தரப்புகள் மலாய்க்காரர் அல்லாத ஒருவர் நாட்டின் சட்டத்துறைத் தலைவராக நியமனம் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும், நடுநிலையாளர்களும், புதிய மலேசியாவில் இனம், மதம் தாண்டி மக்கள் சிந்திக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தவர்களும், பொதுவாக வழக்கறிஞர்களும், சட்ட அறிஞர்களும் டோமி தோமஸ் நியமனத்தை வரவேற்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மலாய்க்காரர் அல்லாத முதல் சட்டத் துறைத் தலைவராகப் பொறுப்பேற்ற பெருமையும் டோமி தோமசுக்கு உண்டு.

அவரது இரண்டு ஆண்டுகால பதவிக்கான தவணை எதிர்வரும் ஜூன் மாதத்தோடு நிறைவடைய இருந்தது.

தனது பதவிக் காலத்திற்குள்ளாக விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 12 பேர்களையும் விடுதலை செய்து அவர் செய்த முடிவு வரலாற்றுபூர்வமானதாகும்.