கூச்சிங் – அன்வார் இப்ராகிம், மொகிதின் யாசின் என இரு தரப்புகளும் அடுத்த ஆட்சியை அமைக்க முனைப்புடன் செயல்பட்டு வரும் வேளையில் ஜிபிஎஸ் எனப்படும் காபுங்கான் பார்ட்டி சரவாக் என்ற சரவாக் கூட்டணிக் கட்சிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 1-ஆம் தேதி கோலாலம்பூரில் சந்தித்து முடிவெடுக்கவிருக்கின்றன.
அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சி அலைவரிசைக்கு இன்று வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணியளவில் தொலைபேசி வழி அளித்த பேட்டியில் சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ டாக்டர் ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் (படம்) இந்த விவரங்களை வெளியிட்டதோடு, தாங்கள் ஆதரிக்க முன்வரும் கூட்டணியில் ஜசெக இடம் பெறக் கூடாது என்ற நிபந்தனையையும் தாங்கள் விதிப்பதாக ஜேம்ஸ் மாசிங் தெரிவித்தார்.
சரவாக் கட்சிகளைப் பொறுத்தவரை எங்களுக்கு தேசிய நலனும், சரவாக் மாநில நலனும் மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்த ஜேம்ஸ் மாசிங், 1963 மலேசியக் கூட்டமைப்புக்கான ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும், சரவாக் கோரும் உரிமைகளைச் செயல்படுத்த முன்வரும் கூட்டணியைத் தாங்கள் ஆதரிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜசெக கூட்டணியில் இருக்கக் கூடாது என நிபந்தனை விதிப்பதற்கு என்ன காரணம் என அஸ்ட்ரோ அவானி செய்தியாளர்கள் தொடுத்த கேள்விக்குப் பதிலளித்த ஜேம்ஸ் மாசிங், “ஜசெகவினர் தங்கள் இஷ்டத்துக்கு நடந்து கொள்வார்கள். உதாரணத்திற்கு கடந்த ஆண்டு சரவாக் மாநிலத்திற்கு வருகை தந்த முந்தைய நிதி அமைச்சரும், ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங், அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் சரவாக் மாநிலம் நிதிப்பற்றாக்குறையால் திவால் ஆகிவிடும் என்ற அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டார். ஒரு நிதியமைச்சர் இவ்வாறு கூறுவது மிகவும் பொறுப்பற்ற நடவடிக்கையாகும்” என்றும் அஸ்ட்ரோ அவானி பேட்டியில் ஜேம்ஸ் மாசிங் சாடினார்.