கோலாலம்பூர் – அடுத்தடுத்து மலேசிய அரசியலில் அரங்கேறிக் கொண்டிருந்த காட்சிகளில் அரசியல் பார்வையாளர்கள் அனைவரையும் ஒரு சேர ஆச்சரியப்பட வைத்த சம்பவம், மீண்டும் எதிரும் புதிருமாகச் செயல்படப் போகிறார்கள் எனக் கருதப்பட்ட துன் மகாதீரும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் இன்று சனிக்கிழமை காலையும் மீண்டும் சந்தித்துப் பேசியதுதான்!
அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்தவர், மகாதீரின் மகள் மரினா மகாதீர் என இணைய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேரடி அரசியலில் ஈடுபடாதவர் என்றாலும் ஆரம்பம் முதலே – மகாதீர் நான்காவது பிரதமராகப் பதவி வகித்த காலம் தொட்டு – சமூக, அரசியல் விவகாரங்களில் ஈடுபாடு காட்டி வந்தவர்.
மீண்டும் பக்காத்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என தனது மகள் மரினா விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்துத்தான் மகாதீர் அன்வாரைச் சந்தித்தார் எனவும் அந்த ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பக்காத்தான் கூட்டணித் தலைவர்கள் சிலர் மரினாவைத் தொடர்பு மகாதீருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ள, மரினாவும் வற்புறுத்த, அதைத் தட்ட முடியாமல்தான் மகாதீர் எஞ்சிய நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களைச் சந்தித்திருக்கிறார்.
ஆனால் அதற்கு முன்னர் மிகவும் கோபத்தில் இருந்த மகாதீர், பெர்சாத்து இளைஞர் தலைவர் சைட் சாதிக் உள்ளிட்ட யாரையும் சந்திக்காமல் மௌனம் காத்து வந்திருக்கிறார்.
மரினாவின் முயற்சிகளைத் தொடர்ந்து மனம் மாறி இறங்கி வந்த மகாதீர் நேற்று இரவிலும், இன்று சனிக்கிழமை காலையிலும் சந்திப்புகளை நடத்த, அதன் முடிவாகத்தான் அவரையே மீண்டும் பிரதமராக நியமிக்கும் முடிவை நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் எடுத்திருக்கின்றனர்.
பின்கதவு வழியாக அரசாங்கம் அமைக்கும் முயற்சிகளை முறியடிக்கவும், சீர்திருத்தங்களை முன்னெடுக்கவும், அரசாங்க சொத்துகளைச் சூறையாடியவர்கள் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்வதைத் தடுக்கவும், போராட்டங்களைத் தொடரவும்தான் மகாதீரை மீண்டும் ஆதரிக்க நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.
எனினும், இந்தச் செய்தி குறித்து கருத்துரைத்த மரினா மகாதீர், தனது பங்கு குறித்து அளவுக்கதிகமாக பத்திரிகைகள் விவரித்திருக்கின்றன எனத் தெரிவிக்கிறார்.
தற்போது நாட்டைச் சூழ்ந்துள்ள அரசியல் குழப்பம் தானாகவே முடிவுக்கு வரும் என்றும், தீர்வுகள் காணப்படும் என்றும் மரினா மகாதீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.