கோலாலம்பூர் – 2018 பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் முன்னின்று பங்கு பெற்றவர் வழக்கறிஞரும், முன்னாள் பெர்சே இயக்கத் தலைவருமான டத்தோ அம்பிகா சீனிவாசன்.
தற்போது நாட்டின் ஜனநாயகம் கேள்விக் குறியாகியிருக்கும் நிலையில், மீண்டும் வீதிப் போராட்டக் களத்திற்குத் திரும்பியிருக்கிறார் அம்பிகா. மொகிதின் யாசின் தலைமையில் அமைக்கப்படும் ‘பின்கதவு அரசாங்கத்திற்கு’ எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை “மலேசியாவைக் காப்பாற்றுவோம்” என்ற தலைப்பில் டத்தாரான் மெர்டேக்கா மைதானத்தில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் அம்பிகாவும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
உடனடியாக அவசர மக்களவைக் கூட்டத்தைக் கூட்டி, யாருக்குப் பெரும்பான்மை என்பதை மொகிதின் யாசின் நிரூபிக்க வேண்டும் என தனது உரையில் அம்பிகா அறைகூவல் விடுத்தார்.
நாடாளுமன்றக் கூட்டத்திற்கான சட்டங்கள் அதற்கான வழிமுறைகளை வழங்குகின்றன என்றும் கருத்துரைத்த மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான அம்பிகா, பொதுநலன் கருதி மொகிதின் யாசின் தனது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.