மலாக்கா: பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஜசெக மற்றும் பிகேஆரின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மலாக்கா மாநில அரசைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்காலான் பத்து சட்டமன்ற உறுப்பினர் நோஹிசாம் ஹசான் பாக்தி (ஜசெக), மற்றும் ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் சாய்லானி காமிஸ் (பிகேஆர்) ஆகியோர் பெரிகாத்தான் நேஷனல் அணியுடன் இணைவதாகத் தெரிவித்துள்ளனர்.
தேசிய முன்னணி மற்றும் பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்களுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் சாய்லானி கூறுகையில், அவர்கள் தங்கள் கட்சியை விட்டு வெளியேறவில்லை என்றும், ஆனால், புதிய மாநில அரசாங்கத்தை தனிப்பட்ட விருப்பத்தில் ஆதரிப்பதாகவும் கூறினார்.
மலாக்கா அம்னோ தலைவர் அப்துல் ராவுப் யூசோ கூறுகையில், அவர்கள் இருவரும் இணைந்து புதிய மாநில அரசாங்கத்தை உருவாக்க ஒப்புக் கொண்டனர் என்று கூறினர்.
“எங்களிடம் இப்போது 17 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்” என்று ராவுப் கூறினார்.
மலாக்கா மாநில சட்டமன்றம்
மலாக்கா மாநிலத்திலும் நம்பிக்கைக் கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளதாக முதலமைச்சர் அட்லி சஹாரி சில நாட்களுக்கு முன்பே கோடி காட்டியுள்ளார்.
28 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மலாக்கா மாநிலத்தில் அம்னோ தனியாக 13 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. ஜசெக 8 தொகுதிகளையும், பிகேஆர் 3 தொகுதிகளையும், அமானா 2 தொகுதிகளையும் பெர்சாத்து 2 தொகுதிகளையும் கொண்டிருக்கிறது. ஆக மொத்தம் நம்பிக்கைக் கூட்டணி 15 தொகுதிகளைக் கொண்டு, 2 தொகுதிகள் பெரும்பான்மையில் ஆட்சி செய்து கொண்டிருந்தது.
தற்போது பெர்சாத்து, நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளதால், அதன் பலம் 13 ஆகக் குறைந்திருக்கிறது.
அம்னோவின் 13, பெர்சாத்துவின் 2, தற்போது புதிதாக சேர்ந்திருக்கும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்தால் அமையவிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் மலாக்கா மாநில அரசாங்கம் 17 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது.