மலாக்கா – இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த மலாக்காவின் புதிய முதலமைச்சருக்கான பதவியேற்பு நிகழ்ச்சி எதிர்வரும் திங்கட்கிழமை மார்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக மாநில ஆளுநர் முகமட் காலில் யாக்கோப் முடிவு செய்துள்ளார்.
இந்த அறிவிப்பை மலாக்கா மாநில செயலாளர் டத்தோஸ்ரீ ஹாசிம் ஹசான் நேற்று வியாழக்கிழமை (மார்ச் 5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்
திங்கட்கிழமையன்று பிற்பகல் 3.30 மணிக்கு இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
ஒத்திவைப்புக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.
புதிய முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வதில் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இழுபறி நிலவுகிறது.
மலாக்கா மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மையை இழந்தாலும் நடப்பு முதலமைச்சர் அட்லி சஹாரி மலாக்கா முதல்வர் பதவியிலிருந்து விலக மறுத்ததால், அவர் மலாக்கா ஆளுநரால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மலாக்கா மாநிலத்திற்கு திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அவரது கோரிக்கையையும் ஆளுநர் ஏற்கவில்லை.
13 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அம்னோ, லெண்டு சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சுலைமான் முகமட் அலியை முதலமைச்சராகப் பரிந்துரைத்துள்ளதாக அறியப்படுகிறது. 55 வயதான சுலைமான், நற்பெயர் கொண்டவர் என்பதோடு, மாநிலத்தின் பல்வேறு இனங்களால் நன்கு விரும்பப்படுபவராக இருப்பதால் இந்த பதவிக்கு சிறந்த வேட்பாளர் அவர்தான் என்று அம்னோ கருதுகிறது.
எனினும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பெர்சாத்து கட்சி பாயா ரும்புட் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் ரபிக் நைசாமொகிதினை முதலமைச்சராக முன்மொழிந்துள்ளது.
28 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மலாக்கா மாநிலத்தில் அண்மையில் பிகேஆர் கட்சியின் டத்தோ முகமட் ஜைலானி (ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர்), ஜசெகவின் டத்தோ நோர்ஹிசாம் ஹசான் பக்தி (பெங்கலான் பத்து சட்டமன்ற உறுப்பினர்) ஆகிய இருவரும் நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்தனர்.
அவர்களின் ஆதரவுடன் அம்னோ தனது 13 சட்டமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு, 15 சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதிய மாநில அரசாங்கத்தை அமைக்க மாநில ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த 15 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் சத்தியப் பிரமாணக் கடிதங்களுடன் நேற்று மாநில ஆளுநரைச் சந்தித்ததாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
அப்படிச் செய்யப்பட்டால், ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதி பெரும்பான்மையில் தேசிய முன்னணியின் ஆட்சி அமையும்.
மலாக்கா மாநில முதலமைச்சர் நியமனத்தில் சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து இல்லையென்றால் மாநில சட்டமன்றத்திற்கு திடீர் தேர்தல் நடத்தப்படலாம்.