ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில ஆட்சிக்குழுவின் பத்து உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை புக்கிட் செரீன் அரண்மனையில் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்காண்டார் முன்னிலையில் பதவியேற்றனர்.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்ச்சியில் ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் கலந்து கொண்டார். ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஹாஸ்னி முகமட்டும் உடனிருந்தார்.
ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனத்தில், நான்கு அம்னோ மாநில சட்டமன்ற உறுப்பினர்களான, டத்தோ சம்சோல்பாரி ஜாமாலி (செமெராங் சட்டமன்றம்); அயூப் ஜாமீல் (ரெங்கிட்), சைதோன் இஸ்மாயில் (சுங்கை பாலாங்) மற்றும் டத்தோ ஒன் ஹாபிஸ் காசி (லாயாங்-லாயாங்) மற்றும் மஇகா சட்டமன்ற உறுப்பினர் ஆர். வித்யானந்தன் (காஹாங்) ஆகியோர் பதவியேற்றதாக ஜோகூர் சுல்தானின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பெர்சாத்துவிலிருந்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள், மஸ்லான் புஜாங் (புத்ரி வாங்சா), முகமட் சோலிஹான் பத்ரி (தெனாங்); டோஸ்ரின் ஜார்வந்தி (புக்கிட் பெர்மாய்) மற்றும் முகமட் இஷார் அகமட் (லார்கின்) மற்றும் ஒரு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சோங் பேட் புள் (பெமானிஸ்) பதவியேற்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, 61 வயதான ஹாஸ்னி, புக்கிட் செரீன் அரண்மனையில் சுல்தான் இப்ராகிமுக்கு முன்னிலையில் 18-வது ஜோகூர் மந்திரி பெசாராக பதவியேற்றார்.