Home One Line P1 மொகிதின் அமைச்சரவையில் இந்தியர்கள் – இந்திய சமுதாயத்திற்கு பெரும் ஏமாற்றம்

மொகிதின் அமைச்சரவையில் இந்தியர்கள் – இந்திய சமுதாயத்திற்கு பெரும் ஏமாற்றம்

1368
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை (மார்ச் 9) அறிவிக்கப்பட்ட பிரதமர் மொகிதின் யாசினின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கையும், முக்கியத்துவமும் இந்திய சமுதாயத்திற்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

ஒரே ஒரு முழு அமைச்சரும் (எம்.சரவணன்) ஒரே ஒரு துணையமைச்சரும் மட்டுமே புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது, மஇகாவுக்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்திற்கும் ஏமாற்றமாக அமைந்து விட்டது.

இதற்கு முன்பு தேசிய முன்னணி அமைச்சரவையில் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மற்றும் டத்தோஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம் என இரு அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். துணையமைச்சர்கள் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் கூட சில சமயங்களில் இடம் பெற்றிருந்தனர்.

#TamilSchoolmychoice

பின்னர் டாக்டர் சுப்பிரமணியம் மட்டும் ஒரே முழு அமைச்சராக இடம் பெற்றிருந்தார்.

ஆனால், 2018-இல் ஆட்சிக்கு வந்த நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் அதிரடியாக 4 அமைச்சர்களை நியமித்ததோடு, ஒரு துணையமைச்சரையும் நியமித்தது.

ஆனால், மொகிதின் யாசின் அமைச்சரவையில் ஒரே ஒரு இந்திய அமைச்சர் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்.

இந்திய சமுதாயத்தின் நீண்ட கால எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருந்து வரும் கல்வி அமைச்சில் துணையமைச்சர் பதவி இந்த முறையும் வழங்கப்படாததும் இந்திய சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கும் இன்னொரு ஏமாற்றமாகும்.

கல்வி அமைச்சு இரண்டு அமைச்சுகளாகப் பிரிக்கப்பட்டும் அந்த இரு அமைச்சுகளில் ஒன்றில் கூட இந்தியர்கள் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.

புதிய அமைச்சரவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ, செனட்டர்களாகவோ அல்லாதவர்கள் சிலர் புதிதாக செனட்டர்களாக நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், மஇகாவின் சார்பில் ஏற்கனவே செனட்டர்களாக இருக்கும் டத்தோ டி.மோகன் மற்றும் டத்தோ எஸ்.ஆனந்தன் ஆகிய இருவரும் ஏனோ புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்திய சமுதாய மேம்பாட்டுக்கான மற்றொரு முக்கிய அரசாங்க அமைப்பான மித்ராவின் பொறுப்பு எந்த அமைச்சருக்கும் செல்லும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.

டாக்டர் சுப்ரா மஇகா தலைவராகவும், சுகாதார அமைச்சராகவும் இருந்தபோது, அப்போதைய செடிக் அவரது மேற்பார்வையின் கீழ் இயங்கி வந்தது.

ஆனால், கடந்த நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் பிரதமர் துறை அமைச்சராக பொன்.வேதமூர்த்தி நியமிக்கப்பட, செடிக் என்பதிலிருந்து மித்ரா எனப் பெயர்மாற்றம் கண்ட இந்தியர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவுக்கு அவரே பொறுப்பும் வகித்தார்.

மொகிதின் யாசின் அரசாங்கத்தில் யாருடைய பொறுப்பில் மித்ரா இயங்கும் என்ற கேள்வி எழுந்திருப்பதற்கு இன்னொரு முக்கியக் காரணம், பிரதமர் துறையில் இந்திய அமைச்சரோ, துணையமைச்சரோ நியமிக்கப்படாதது ஆகும்.

பிரதமர் துறையின் ஓர் இலாகாவாக இயங்கும் மித்ராவை இன்னொரு துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சரியான முறையில் நிர்வகிக்க முடியுமா என்பதும் கேள்விக் குறிதான்!

இந்திய சமுதாயத்திற்கென அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர, இந்திய சமுதாயம் மகிழ்ச்சி கொள்ளவோ, பெருமை கொள்ளவோ, எதுவும் மொகிதின் யாசின் புதிய அமைச்சரவை அறிவிப்புகளில் இல்லை என்பதுதான் உண்மை!

-இரா.முத்தரசன்