கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான புதிய அரசாங்கத்தை 15-வது பொதுத் தேர்தல் வரை தொடர்ந்து ஆதரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் அம்னோ உறுதிபூண்டுள்ளதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்தார்.
அரசாங்கம் மக்களின் விருப்பங்களை எவ்வளவு தூரம் கவனித்து செயல்படுகிறது என்றும், அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்கிறதா என்பதையும் கவனிக்க இருப்பதாக நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“புதிய அரசாங்கம் இனம், மதம், மற்றும் சமூக நிலைப்பாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களுக்கும் செழிப்பைக் கொண்டுவருவதன் மூலமும், முந்தைய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதன் மூலமும், இன உறவுகளை பாதிக்கும் சிக்கல்களைக் கையாள்வதன் மூலம் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.”என்று அவர் கூறினார்.
“புதிய அரசாங்கம் தற்போதைய பொருளாதார மந்தநிலையை அவசரமாக நிவர்த்தி செய்ய வேண்டும். இதில் உலகளாவிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள ஒரு பயனுள்ள செயல் திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் கொவிட்-19 பாதிப்பின் தாக்கம் ஆகியவை அடங்கும்,” என்று அவர் கூறினார்.
துன் டாக்டர் மகாதீர் முகமட் பதவி விலகியதன் மூலம் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 1-ஆம் தேதி புதிய அரசாங்கத்தை உருவாக்க வழிவகுத்த மொகிதினுக்கு அம்னோ ஆதரவு வழங்குவதாகவும், நாட்டையும் மக்களையும் அரசியல் நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதற்கான தார்மீக பொறுப்பு அவருக்கு இருப்பதாகவும் சாஹிட் கூறினார்.
மக்களின் குரல் மற்றும் விருப்பங்கள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக புதிய அரசாங்கத்தின் முகவராக அம்னோ தொடர்ந்து செயல்படும் என்று அவர் கூறினார்.