வாஷிங்டன் – கொவிட் 19 பாதிப்புகளைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் தேசிய நிலையிலான அவசரகாலத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா முழுவதும் கொவிட் 19 பரவி வருவதைத் தொடர்ந்தும், பலர் இந்த நோய் பாதிப்பால் மரணமடைந்திருப்பதாலும், ஹாலிவுட் நட்சத்திரம் டோம் ஹேங்க்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பலருக்கும் இந்த நோய் தொற்றியுள்ளதாலும், டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அவசரகாலப் பிரகடனம் மூலம் மத்திய அரசாங்கத்தின் முழு அதிகாரங்களையும் சக்தியையும் பயன்படுத்தி கொவிட் 19 நச்சுயிரிக்கு எதிராகப் போரிட முடியும் என்று தெரிவித்திருக்கும் டிரம்ப் இதற்காக 50 பில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கியுள்ளார்.
அமெரிக்காவில் இதுவரையில் 1,600 பேர் கொவிட் 19 நச்சுயிரியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 47 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.