கோலாலம்பூர்: கொவிட் -19 காரணமாக மலேசியாவில் இன்று திங்கட்கிழமை தடைக் கட்டுப்பாடு உத்தரவு இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து பரவலாக சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுவதை அது மறுத்துள்ளது.
மார்ச் 16 (இன்று) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நாட்டில் வெளியேறத்தடை குறித்த விளக்கப்படம் தவறானது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தனது அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் தெரிவித்துள்ளார்.
“தயவுசெய்து இது போன்ற தவறான வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்,” என்று அவர் கூறினார்.
இன்று பிற்பகல் முதல், #Malaysialockdown ஹேஸ்டேக்குடன் முகநூல் மற்றும் வாட்சாப் வழியாக மக்கள் பகிர்ந்து கொண்ட ஒரு விளக்கப்படம் வைரலாகிவிட்டது.
“வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது அல்லது பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்குச் செல்லக்கூடாது, பிரார்த்தனை செய்ய வேண்டும் போன்ற பல வழிமுறைகளைக் கொண்ட விளக்கப்படம் பரவலாக உள்ளது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியர்கள் தங்கள் வீடுகளில் தங்குமாறு அது வலியுறுத்தியது.
கொவிட் -19 காரணமாக 190 புதிய சம்பவங்கள் நேற்று நண்பகல் வரை பதிவாகியுள்ளன. மொத்த எண்ணிக்கை 428-ஆக பதிவாகி உள்ளது.