நைரோபி, ஏப். 10- கென்யாவில் மார்ச் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் 50 சதவிகித வாக்குகள் பெற்று துணை பிரதமராக இருந்த உரு கென்யட்டா (படம்) புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், இந்த தேர்தலில் போட்டியாளரும், பிரதமருமான ரையிலா ஒடிங்கா முறைகேடு நடந்துள்ளதாக கூறினார். அதைத்தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் கென்ய உச்ச நீதிமன்றம், தேர்தல் உண்மையாகவும் நேர்மையாகவும் நடைபெற்றுள்ளது. ஆகையால் உரு கென்யட்டாவின் வெற்றி செல்லும் என்று கூறியது.
இந்நிலையில் தலைநகர் நைரோபியில் உள்ள மைதானத்தில், பிரமுகர்கள் உள்பட பல்லாயிரக்கணக்காணோர் முன்னிலையில் உரு கென்யட்டா அதிபராக நேற்று பதவியேற்றார். போட்டியாளர் ரையிலா ஒடிங்கா இந்த பதவியேற்பு விழாவில் பகிர்ந்துகொள்ளவில்லை.
கென்யாவில் கடந்த 2007-ம் ஆண்டு தேர்தலின்போது வெடித்த கலவரத்தில் 1200 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.